இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது என்பது, நீண்டகால தொடர் முயற்சி. அனைவருக்கும் இனம் அல்லது சமய பிடிப்பு இருக்கும். இது ஒவ்வொரு சமூகத்திற்கும் இயல்பானது. ஆனால், பாரபட்சம், பாகுபாடு என்று வரும்போதுதான் பிரச்சினை உருவாகிறது என்றார் பிரதமர் லீ,
சீன மொழி பேசத்தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று வரும் வேலைக்கு ஆள் தேடும் விளம்பரங்கள் உண்மை யிலேயே அந்த வேலைக்கு சீன மொழி அவசியம் என்பதை விளக்காதது, வீடு தேடுபவர்கள் சீனர்கள் அல்ல என சொத்து முகவர்கள் அறிந்த பின்னர், அவர்களுக்கு வீடு வாடகைக்குவிட மறுப்பது போன்ற சில எடுத்துக்காட்டுகளை அவர் சுட்டினார்.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இத்தகையவற்றை கடுமையாக அனுபவிக்கிறார்கள். ஏனெனில், அவர்களே இத்தகைய இனப் பாரபட்சம் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்.
"நமது தேசிய பற்றுறுதி இன்னும் விரும்பப்படும் ஒன்றாகவே இருக்கிறது. முழுமையாக எட்டப்படவில்லை என்று அவர்கள் கோபம். காயம், வேதனையை உணர்கிறார்கள்.
"பெரும்பான்மை இனமாக இருப்பதைவிட, சிறுபான்மையினமாக இருப்பது சிரமமானது என்பதை அறிவேன். இது எல்லா பல இன சமூகத்திலும் உள்ளதுதான். ஆனால், இதேநிலையை சிங்கப்பூரில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இதனால்தான் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய நாம் முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும்," என்றார் அவர்.
பெரும்பான்மையினர், சிறுபான்மையினரிடையே தோன்றும் கவலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரம், தனிமனிதர்களிடம் இனவாத செயல்களுக்கு எதிராகத் துணிந்து நிற்கும் தைரியம் வேண்டும்.
அதாவது, இனவாத சம்பவங்களுக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிப்பது. இன அடிப்படையிலான எதிர்ப்புணர்வை வேறு வகையான போராட்டமாகச் சித்திரிப்பதைத் தட்டிக்கேட்க வேண்டும். உதாரணமாக, சிங்கப்பூரர்களை முன்னிறுத்துவதாகக் கூறி, சிங்கப்பூர்-இந்தியாவுக்கிடையேயான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கம் கடுமையான இனவாத அடிப்படையிலான ஒன்று என்றார் பிரதமர் லீ.

