அண்டை வீட்டார் தனது பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டி இருந்ததால், அவரது பணிப்பெண்ணை இரண்டாவது தடுப்பூசி போட அழைத்துச் சென்றார் 72 வயது திருவாட்டி வயலெட் சிம்.
வாம்போ ரோடு, புளோக் 115ன் 6வது மாடியில் வசிக்கும் 10 குடும்பங்களுக்கிடையே இத்தகைய பரிவான செயல்கள் சாதாரணமாக நடப்பது. அந்தத் தளத்தில் பல ஆண்டுகளாக நான்கறை அல்லது ஐந்தறை வீடுகளில் இக்குடும்பங்கள் வசிக்கின்றன.
பல இன, பல சமய நாடாகத் திகழும் சிங்கப்பூர் குறித்துப் பேசிய பிரதமர் லீ சியன் லூங் எடுத்துக்காட்டாக இந்த அக்கம் பக்கத்தாரைக் குறிப்பிட்டுப் பேசினார்.
1993ல் அந்தக் குடியிருப்பு கட்டப்பட்டபோது முதலில் குடியேறியவர்களில் தகவல் தொழில்நுட்ப நிர்வாக ஊழியரான அலஸ்டைர் டான், 57, இல்லத்தரசியான திருவாட்டி கேத்தரினா பீ, 56, தம்பதியும் ஒன்று.
2011இல் அங்கு குடியேறிய திருவாட்டி சிம், அவரது கணவர் ஜெஃப்ரி கோ, 77, தம்பதியை, டான் தம்பதியினர் வரவேற்று அவர்களுக்கு நட்பான சூழலை ஏற்படுத்தினர்.
உதாரணமாக, ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்த தளத்தில் வசிப்போர் உணவைப் பகிர்ந்துகொண்டு, ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொள்ள பொது நடைபாதையில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார் திரு டான்.
கொவிட்-19 தொற்றுநோய் சூழலில் இவை நிறுத்தப்பட்டாலும், அவரும் அவரது மனைவியும் ஆண்டிற்கு பல முறை இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
"நல்ல, நட்பான அண்டை வீட்டாரைப் பெற்றிருப்பது முக்கியம். இது ஒரு குடும்பம் போன்றது," என்றார் ஓய்வுபெற்ற மூத்த நிர்வாக தயாரிப்பாளரான திரு கோ.
இந்த உணர்வை ஓய்வுபெற்ற ஓட்டுநர் 63 வயது திரு சிங்கவேலு ராஜேந்திரனும் பகிர்ந்துகொண்டார். அவர் தீபாவளியின்போது தமது சீன அண்டை வீட்டாருக்கு பாரம்பரிய சிற்றுண்டிகளை வழங்குவார். அவர்கள் சீனப் புத்தாண்டின்போது அவருக்குச் சிற்றுண்டிகளை வழங்குவர்.
"நாங்களோ அல்லது அண்டை வீட்டாரோ வெளியூர் சென்றால், எங்கள் வீடுகளை பார்த்துக்கொள்ள ஒருவரையொருவர் நம்பியிருப்போம்," என்றார் நிர்வாக ஊழியராகப் பணிபுரியும் அவரது 63 வயது மனைவி மகேஸ்வரி கோவிந்தசாமி.
திருவாட்டி சிம் அவரது அண்டை வீட்டார் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தால், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற உதவுகிறார். மேலும், துணிதுவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி மின்தூக்கித் தளத்தை அடிக்கடி கழுவுவார்.
பிரதமர் லீ தமது உரையில் சுட்டிக்காட்டிய உயர்மாடிக் குடியிருப்பு வாழ்க்கையில் உண்மையான 'கம்பத்து' உணர்வைக் கொண்டுள்ள குடும்பங்கள் இவை.
சிங்கப்பூர் பல இனங்கள், பல சமயங்கள் வாழும் நாடாக திகழ்கிறது என்பதையும் ஒவ்வொருநாளும் மனதைத் தொடும் உறவாடல்கள் பல நடக்கின்றன என்பதையும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார்.

