சிங்கப்பூரில் எல்லா இனத்தவரும் சமமாக நடத்தப்படுகின்றனர் என்றும் எந்த இனத்துக்கும் சிறப்புச் சலுகை தரப்படுவதில்லை என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தேசிய தினப் பேரணி உரையில் நேற்று மாண்டரின் மொழியில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.
சிங்கப்பூரில் சீனர்களுக்குச் சலுகை உள்ளது என்ற வாதம் அடிப்படையற்றது என்றார் அவர்.
அதே நேரத்தில் சிறுபான்மை இனத்தவரின் கவலைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு இணக்கமாக நடந்துகொள்ளும்படி இங்குள்ள பெரும்பான்மை இனமான சீனர்களைப் பிரதமர் லீ கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர், நாடான தொடக்கத்திலிருந்து இனங்களின் சமத்துவம்தான் அடிப்படைக் கொள்கை என்பதில் நாட்டை உருவாக்கிய தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
அரசாங்கம் எந்த இனத்துக்கும் பாரபட்சம் காட்டாது நடுநிலையாக சட்டங்களையும் நிர்வாக நடைமுறைகளையும் உருவாக்கியது என்று பிரதமர் சொன்னார்.
சீனச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தொடக்ககால அடிப்படைக் கொள்கை, சிங்கப்பூரின் பல்லின நல்லிணக்கத்தின் அடிநாதமாகி உள்ளதாக அவர் கூறினார்.
"நாட்டின் நலனுக்கு சீன சிங்கப்பூரர்கள் சிலவற்றை விட்டுக்கொடுத்தனர். உதாரணத்துக்கு சிறுபான்மை இனத்தவர் சங்கடப்படாமல் இருப்பதற்காக, ஆங்கிலத்தைப் புழங்குமொழியாக ஏற்றுக்கொண்டோம். மாண்டரினையும் மற்ற கிளைமொழிகளையும் பேசுவோர் இதனால் பாதிக்கப்பட்டனர்," என்றார் அவர்.
இன அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துவதைச் சுட்டும் 'சீனருக் குச் சலுகை' எனும் சொற்றொடர் இங் குள்ள சூழலுக்கு ஏற்றதா என்பது விவாதத்தை உண்டாக்கியது. சீன சமூகத்தில் சிலர் தங்கள் சமூகம் பலவற்றையும் விட்டுக்கொடுத்துள்ளதாகக் கருதலாம் என்று கூறிய திரு லீ, இனச் சமத்துவம் எனும் கொள்கை சீனர்கள் உட்பட எல்லா இனத்தவருக்கும் நன்மை அளித்துள்ளது என்றார்.
எனினும், பல்லாண்டுகால அமைதியால் இன நல்லிணக்கம் குறித்த மெத்தனம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சிங்கப்பூரர்கள் அதுபற்றி அதிகம் கவனிக்காதிருக்க லாம் என்றும் பிரதமர் கூறினார்.
சில சீன சிங்கப்பூரர்களுக்குச் சிறுபான்மை இனத்தவரின் உணர்வுகள் தெரியாமல் இருக்கலாம் என்ற பிரதமர், வீடுகளை வாடகைக்கு எடுப்பதிலும் வேலை தேடுவதிலும் சிறுபான்மை இனத்தவர் பிரச்சினைகளை எதிர்நோக்குவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
சில சீன சிங்கப்பூரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு வீட்டை வாடகைக்குத் தரப் பிடிக்காதிருக்கலாம். எல்லா வீட்டு உரிமையாளர்களும் அப்படி இல்லை எனும்போதும், அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிறுபான்மை இனத்தவரின் உணர்வு களைப் புரிந்துகொள்வதில் அதிகச் சிரமம் இருக்காது என்றார் அவர்.
வேலைகளைப் பொறுத்தவரை, சில வேலைகளுக்குச் சீனமொழித் திறன் தேவைப்பட்டபோதும், தேவைப்படாத வேலைகளிலும் அது தகுதியாகக் குறிப்பிடப்படும்போது, சிறுபான்மை இனத்தவருக்கு அது நியாயமற்ற ஒன்றாக தெரியக் கூடும் என்று திரு லீ விளக்கினார்.
பொதுவெளியில் இன அடிப்படையிலான விருப்புவெறுப்புகள் காலப்போக்கில் பாரபட்சமாக மாறி சிறுபான்மை இனத்தவர் தங்களுக்கு எதிராக பாகுபாடு உள்ளதாக கருதும் நிலைக்கு இட்டுச் செல்லாம் என்றார் திரு லீ.

