வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை
சிங்கப்பூரின் குறைந்த வருமான ஊழியர்களை ஆதரிக்கும் அரசாங்க முயற்சிகளில் உள்ளூர்
வாசிகள் தகுதிபெறும் சம்பள முறை கடுமையாக்கப்படுவதும் ஒன்று. அதன்படி, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த சம்பள முறையின்கீழ் அந்நிறுவனங்களில் உள்ள உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் $1,400 மாதச் சம்பளம் வழங்க வேண்டும். இதனை கட்டாயமாக்குமாறு நிறுவனங்கள் விரைவில் கேட்டுக்கொள்ளப்படும் என்று பிரதமர் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.
சில்லறை வர்த்தகத்திற்கு விரிவுகாணும் சம்பளமுறை
"குறைந்த வருமான ஊழியர்களுக்கான முத்தரப்பு பணிக்குழு அரசாங்கத்திடம் அளித்திருக்கும் மூன்று பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. மூன்று பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
"படிப்படியாக உயரும் சம்பளமுறையை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்துவதும் அந்த சம்பளமுறையை கடைப்பிடிக்கும் நிறுவனங்களை அங்கீகரிப்பதும் பணிக்குழுவின் இதர இரு உத்திகள். அடுத்த ஆண்டு முதல் சில்லறை வர்த்தகத்திற்கு இது விரிவுபடுத்தப்படும். அதனைத் தொடர்ந்து உணவு சேவைகளுக்கும் கழிவு நிர்வாகத் துறைக்கும் இந்த சம்பள முறை அறிமுகம் காணும்.
"படிப்படியாக உயரும் சம்பள முறையைக் கடைப்பிடிக்கும் நிறு னங்களை அங்கீகரிக்கும் விதமாக அதற்கான முத்திரை வழங்கப்படும்.
"வேலைநலன் வருமான உதவித் திட்டத்திற்கு அரசாங்கம் செலவிடும் வருடாந்திர தொகை இன்னும் ஈராண்டுகளில் $1.1 பில்லியனுக்கு உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமான ஊழியர்களுக்கும் சுய
தொழில் புரிவோருக்குமான வருவாய் ரொக்கமாக நிரப்பப்படுவதுடன் மத்திய சேம நிதி பங்களிப்புகளிலும் தொகை நிரப்பப்படுகிறது. இதன் மூலம் தற்போது கிட்டத்தட்ட அரை மில்லியன் ஊழியர்கள் பயனடைகின்றனர்.
"அரசாங்கத்தின் புதிய முயற்சிகள் காரணமாக கிட்டத்தட்ட எல்லா குறைந்த வருமான ஊழியர்களும் அடுத்த ஈராண்டுகளில் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். வேலைநலன் திட்டத்திற்காக தற்போது ஆண்டுக்கு $850 மில்லியன் செலவிடப்படுகிறது.
"இத்தொகையை அதிகரிப்பதன் வழி வேலைநலன் திட்டத்தில் இடம்பெற்றுள்ள எல்லா ஊழியர்களுக்கும் வழங்கீட்டுத் தொகை அதிகரிக்கப்படும். அத்துடன் இத்திட்டம் 30 வயதிலிருந்து தொடங்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். குறைந்த வருமான ஊழியர்கள் வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் ஓய்வுக்காலம் போன்றவற்றில் எவ்வாறு அரசாங்கத்திடம் உதவி பெறுகிறார்கள் என்பதையும் திரு லீ விளக்கினார்.
"குறைந்த வருமான ஊழியர்களுக்கு அவசரகால உதவிகளுக்கும் மேலாக நீண்டகால ஆதரவு தேவைப்படுகிறது. அதற்கான ஒரு ஏற்பாடு உள்ளூர்வாசிகள் தகுதிபெறும் சம்பளமுறையைக் கடுமையாக்குவது. தற்போது வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில உள்ளூர் ஊழியர்களுக்கே இந்த சம்பள முறையை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன. புதிய விதிமுறை நடப்புக்கு வந்த பின்னர் வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் வைத்திருக்கும் நிறுவனங்களிலுள்ள எல்லா ஊழியர்களுக்கும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த எல்லா உள்ளூர் ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச மாதச் சம்பளம் $1,400 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலத்திற்கேற்ப இதில் மாற்றம் செய்யப்படும். ஆகக் கடைசியாக 2020 ஜூலையில் $100 உயர்த்தப்பட்டு தற்போது $1,400ஆகி இருக்கிறது," என்றார் பிரதமர்.

