படிப்படியாக உயரும் சம்பள முறையை சில்லறை வர்த்தகத் துறையில் செயல்படுத்து வது வரவேற்கப்படுவதாகவும் சம்பளம் மேம்பாடு காண்பதாலும் வாழ்க்கைத்
தொழில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் மேலும் பல சிங்கப்பூரர்களை இந்தத் துறைக்கு ஈர்க்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் சிங்கப்பூர் சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஆர். தினகரன் (படம்). இந்தத் துறையில் உள்ளவர்கள் திறன்மேம்பாடு கண்டு, உற்பத்தித்திறன் அதிகரித்து, தெளிவான வாழ்க்கைத் தொழில் பாதையை உருவாக்கி, சம்பளம் உயர்வதற்கு வகைசெய்யும் முறையை சங்கம் ஆதரிக்கிறது என்றார் அவர்.
"சில்லறை வர்த்தகச் சமூகத்தில் மேம்பட்ட சமூகப் பிணைப்பையும் அரவணைப்பையும் இதன்மூலம் பெறலாம் என்று நம்புகிறேன். முடங்கியுள்ள சுற்றுப்பயணிகள் வரத்தாலும் உலகளாவிய சந்தையின் கடும் போட்டியாலும் அதிகரித்து வரும் நடைமுறைச் செலவுகளாலும் சில்லறை வர்த்தகத்தின் மீட்சி இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மெத்தனமாக இருக்கும். இந்தச் சவால்கள் இருந்தாலும் இந்தப் புதிய சம்பள முறை சரியான திசையை நோக்கிய கொள்கை. சிங்கப்பூரின் வளப்பத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய துடிப்பான நடவடிக்கை யாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான ஆலோசனையை எங்கள் சங்கத்தினர் மேற்கொள்வார்கள். வர்த்தக சமூகத்தினரிடமும் கருத்துகள் திரட்டப்படும்," என்றார்.

