விநியோக ஊழியர்களுக்கான வேலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.
இணையத்தளங்களுக்காக விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அடிப்படை வேலைப் பாதுகாப்பு இல்லாத சூழல், வளர்ந்து வரும் ஒரு சிக்கல் என்றும் இதனால் அவர்களுக்கு மேலும் பாதுகாப்பான ஓர் எதிர்காலத்தை உருவாக்கித் தருவதில் அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.
அதிலும் கொவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிக்கிடையே உணவு விநியோகங்கள் பெருமளவு அதிகரித்த நிலையிலும் இக்குறிப்பிட்ட குறைந்த வருமான ஊழியர்களின் வருமானம் அதிகமாக இல்லை என்பது தமக்குக் கவலை அளிக்கும் ஒன்றாக இருப்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
'கிராப்', 'ஃபுட்பேன்டா', 'டெலிவரூ' போன்ற நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களுக்கு எத்தகைய பணிகள் தரப்பட வேண்டும் என்றும் ஊழியர்களின் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்றும் நிர்வகித்து வருகின்றன. விநியோகப் பணியை மிக மெதுவாகச் செய்வது போன்ற அம்சத்துக்கும் ஊழியர்கள் தண்டிக்கப்படலாம்.
இந்நிலையில், விநியோக ஊழியர்
களுக்கு வேலை ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்குக் கிடைக்கும் அடிப்படைப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. வேலையிடக் காயங்களுக்கு இழப்பீடு, தொழிற்சங்க ஆதரவு, முதலாளியின் மத்திய சேம நிதி பங்களிப்பு போன்ற சலுகைகள் கிடைக்காமல் போகின்றன.
"எல்லா ஊழியர்கள் போன்றவர்கள்தான் விநியோக ஊழியர்கள்," என்று குறிப்பிட்டார் பிரதமர் லீ. மோசமான வானிலை, மோட்டார் வண்டி பழுதடைதல், பயமுறுத்தும் நாய்கள் எனத் தங்களின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் விநியோக ஊழியர்களுக்கு நெருக்குதல் ஏற்படவே செய்கிறது. சிங்கப்பூரில் வேலை பார்க்கும் விநியோக ஊழியர்களுக்கு ஒவ்வொரு விநியோகத்திற்கும் $6.50 முதல் $7.50 வரை கிடைப்பதாகக் கடந்தகால தகவல்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய பணியில் ஈடுபடுவதில் கூடுதல் நபர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், மற்ற ஊழியர்களுக்குப் பாதுகாப்பு தரும் வேலை நியமனச் சட்டம், இவர்களுக்கு இல்லை என்ற நிலை நிலவி வருகிறது. மனிதவள அமைச்சு வெளியிட்ட ஆக அண்மைய புள்ளிவிவரங்களின் படி, 2020ல் தங்களின் சொந்தக் கணக்கில் தினசரி வேலையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 228,200 என்று கூறப்பட்டது. இது 2019ல் 211,000ஆக இருந்தது. விநியோக ஊழியர்களைத் தவிர, மற்ற வேலைகளில் உள்ள குறைந்த வருமான ஊழியர்களுக்கும், முதலாளி போன்று இயங்கும் இணையத்தளங்களுடன் உறவு உள்ளதென பிரதமர் சுட்டினார்.
வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, நாளடைவில் பணி ஓய்வு போன்ற அம்சங்கள் தொடர்பில் அவர்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும் என்றார் அவர்.
"மேலும் பலர் இத்தகைய வேலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதனால் இது பெரிதாகி வரும் ஒரு சிக்கல்," என்றார். மனிதவள அமைச்சு இதை ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பில் ஆலோசனையும் நடத்தும். இத்தகைய ஊழியர்களுக்கு மேலும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர, இந்த விவகாரங்களை நாம் கையாள்வது அவசியம்," என்று தம் உரையில் குறிப்பிட்டார் திரு லீ.

