வேலைக்கான போட்டி, எம்பிளாய் மண்ட் பாஸ், எஸ்-பாஸ் ஊழியர்களின் தரம் ஆகியவற்றில் சிங்கப்பூரர்கள் கொண்டிருக்கும் கவலை
களைப் போக்கும் வண்ணம் இனி வரும் காலங்களில் எம்பிளாய் மண்ட் பாஸ், எஸ்-பாஸ் ஆகியவற்றுக்கான தகுதி அடிப்படை காலப் போக்கில் கடுமையாக்கப்படும்.
மேலும் வேலை இடத்தில் எல்லா ஊழியர்களும் நியாயமாக நடத்தப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்படும். அதே சமயம் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர் உள்ளூர் சமூக நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல சிங்கப்பூரர்களும் தங்களைப்போல் இல்லாதோருடன் இணைந்து வாழவும் அவர்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும்.
பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் இவற்றைக் குறிப்பிட்டார்.
"எம்பிளாய்மண்ட் பாஸ், எஸ்- பாஸ் ஆகியவற்றுக்கான தகுதி அடிப்படை திடுதிப்பென இப்போதே கடுமையாக்கப்படாது. அவ்வாறு செய்வது வர்த்தகங்களைப் பாதிக்கும். இருப்பினும். காலப்போக்கில் படிப்படியாக இதில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். வேலை அனு
மதிச்சீட்டில் இருப்பவர்களை எண்ணி அமைதியற்ற நிலை அதிகரிப்பதை நாம் காண்கிறோம். கொவிட்-19 தொற்றுக்கு முன்னரே இந்த நிலை நிலவியது. ஆனால் பொருளியல் நிலையின்மை இதனை அதிகரித்துள்ளது,'' என்று பிரதமர் லீ சுட்டினார்.
வேலை அனுமதிச் சீட்டில் உள்ளவர்கள் நமது ஊழியர் அணியை வலுப்படுத்தி பொருளியலை வளர்க்க இங்கு வருகிறார்கள் என்ற திரு லீ, "நல்ல காலத்தில் இது முதலீட்டை ஈர்க்கிறது. இது உள்ளூர்வாசிகளுக்கு வேலைகளை உருவாக்குகிறது. அதேநேரம் கடந்த ஆண்டைப் பார்க்கும்போது வெளிநாட்டு ஊழியர் அணி சுருங்கும்போது உள்ளூர்வாசிகள் வேலை இழப்பதைத் தவிர்க்க உதவும் கேட யமாக இது அமைகிறது," என்றார்.
"பல சிங்கப்பூரர்கள் இந்த பொருளியல் வாதங்களைப் புரிந்து கொண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கைச்சூழல் சார்ந்த உணர்வுபூர்வமான வாதங்களும் நிலவுகின்றன. வேலையிடத்தில் வேலைகள், வேலை வாய்ப்புகளுக்கான போட்டி என வரும்போது பல கேள்விகள் எழுவது நியாயம்தான்," என்றார் பிரதமர் லீ.

