இனி சேமிப்பைத் தொடவேண்டாம்; வளர்ச்சி, வேலை, செழிப்பை உருவாக்குவதில் கவனம்

இனி சேமிப்பைத் தொடவேண்டாம்; வளர்ச்சி, வேலை, செழிப்பை உருவாக்குவதில் கவனம்

2 mins read
3ad6a837-d0cb-4afc-8e95-08c3f4ac93c0
-

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இனிமேல் எதிர்காலத்திற்கான வளர்ச்சி, வேலை, செல்வச்செழிப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.

நீண்டகால வளர்ச்சியைக் கட்டிக்காக்க மூன்று காரியங்களை நாம் சாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தொழில்துறை மையம் என்ற சிங்கப்பூரின் நிலையை நாம் கட்டிக்காக்க வேண்டும்; மேலும் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து ஈர்க்க வேண்டும்; சிங்கப்பூர் நிறுவனங்களையும் தொழில்முனைவர்களை யும் பெருக்க வேண்டும் என்று திரு லீ தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்டார்.

தொழில்துறை மையம் என்ற தனது நிலையை சிங்கப்பூர் கட்டிக்காக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவர், இதற்கு எல்லைகளை விரைவில் திறக்க வேண்டியது முக்கியம் என்றார்.

வெளிநாட்டு முதலீடுகளை மேலும் கவர வேண்டிய தேவை பற்றி குறிப்பிட்ட பிரதமர் லீ, அத்தகைய முதலீடுகள் காரணமாக சிங்கப்பூரர்களுக்குப் பல நல்ல வேலைகள் உருவாகும் என்று கூறினார்.

புதிய பொருளியலில் சிங்கப்பூர் நிறுவனங்கள் முத்திரை பதிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் பல தொழில்முனைவர்கள், உலகளவில் விரிவடைந்து, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் தொழில்களை வளர்க்க எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவு அளித்து வருவதை திரு லீ சுட்டிக்காட்டினார்.

தொழில்முனைவர்கள் புதிய நிறுவனங்களைத் தொடங்கி அவற்றை வளர்க்க தேவையான சூழலை அரசாங்கம் உண்டுபண்ணும் என்றும் அவர் உறுதி கூறினார்.

இதில் நிதியுதவியும் மானியங்களும் ஓரளவுக்குத்தான் கைகொடுக்கும் என்று தெரிவித்த திரு லீ, தொழில்முனைவரின் உறுதியும் வளங்களும்தான் கடைசியில் வெற்றியை உறுதி செய்யும் என்றார்.

கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவிபுரிந்து முன்பைவிட வலுவாக அவர்கள் தலைதூக்க அரும்பாடுபட்டு இருக்கிறோம் என்ற பிரதமர், இனிமேல் நாட்டின் சேமிப்பில் கை வைக்க வேண்டிய நிலை இல்லை என்றார்.

அமெரிக்காவும் சீனாவும் வலுவாக வளர்ந்து வருகின்றன. ஐரோப்பாவும் மீட்சி அடைகிறது. இதை வைத்து பார்க்கையில், சிங்கப்பூரின் இந்த ஆண்டு வளர்ச்சி 6% முதல் 7% வரை இருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சு மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறது என்றார் அவர்.