முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் 10ல் 8 பேர்; கிருமி முற்றிலும் ஒழியாது
சிங்கப்பூரில் இப்போது 10 பேரில் எட்டுப் பேர் முற்றிலும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்தார்.
ஆகையால் சிங்கப்பூர் இப்போது ஒரு புதிய சூழ்நிலையை எட்டி இருக்கிறது என்றும் கொவிட்-19 கிருமி பரவல் மெதுவடைந்து இருக்கிறது என்றும் தெரிவித்த திரு லீ, இருந்தாலும் கொரோனா கிருமி உருமாறுவதையும் டெல்டா கிருமி அதிவேகத்தில் பரவக்கூடியது என் பதையும் சுட்டிக்காட்டினார்.
இதை வைத்துப் பார்க்கையில் கொவிட்-19 தொற்றை அறவே ஒழிப்பது என்பது இனிமேல் இயலாது. பொருளியல் முடக்கம் அறிவித்தாலும் இதைச் சாதிக்க முடியாது என்று திரு லீ குறிப்பிட்டார்.
ஆகையால், சளிக்காய்ச்சல், அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களைப் போல கொவிட்-19 கிருமியும் தொடர்ந்து இருந்து வரும் என்பதால், இதற்கு மக்கள் ஆயத்தமாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கொவிட்-19க்கு எதிரான மீள்திறனை சிங்கப்பூர் பெற்றிருக்க தடுப்பூசியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உதவும் என்று பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் மிகவும் எச்சரிக்கையுடன் கட்டம் கட்டமாக பொருளியலைத் திறந்துவிடும் என்று கூறிய பிரதமர், இதில் மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூர் அவசரப்படாது என்றார்.
சிங்கப்பூரில் கடந்த வாரத்தில் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்றாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சீராக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நிலைநாட்டி வருவது அவசியம் என்று கூறிய பிரதமர் திரு லீ, இப்படிச் செய்தால்தான் சிங்கப்பூரை உலகத்துடன் மீண்டும் இணைக்க முடியும் என்றார்.
இதனிடையே, இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களை எட்ட அரசாங்கம் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ளும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இன்னமும் 100,000 முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் இது தமக்கு அதிக கவலை தருவதாக உள்ளது என்று திரு லீ கூறினார்.
"கொவிட்-19 கிருமி நீடிக்கும் என்பதால் ஒவ்வொருவரும் அந்தக் கிருமியைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்குத் தொற்று ஏற்படலாம். இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவரை அந்தக் கிருமி தொற்றும் என்பது ஏறக்குறைய நிச்சயம்.
"அப்படித் தொற்றினால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் நாம் அனைவரும் நம் பங்கை ஆற்றினால் சூழ்நிலையைச் சீராக வைத்திருக்க முடியும். படிப்படியாக வழக்கமான வாழ்வுக்கு நாம் திரும்ப முடியும்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைப் பிரதமர் திரு லீ அன்புகூர்ந்து கேட்டுக்கொண்டார்.

