மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்

மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்

2 mins read
8257e27e-ae1e-4f66-999e-b5560f08f336
மூத்த இயன் மருத்துவ நிபுணர் செ. மோகனப் பிரியா. படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

சிங்கப்பூர் கொவிட்-19 தொற்றை பல நாடுகளைவிட சிறந்த முறையில் சமாளித்து இருக்கிறது என்று தெரிவித்த பிரதமர் லீ சியன் லூங், இதற்காக முன்களப் பணியாளர்களுக்கு நன்றி கூறினார்.

இவர்களில் சிங்கப்பூரர்களும் மற்றவர்களும் அடங்குவர். இவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக அரும்பாடுபட்டு இருக்கிறார்கள்.

பல நேரங்களில் தங்களுடைய பணியையும் கடந்து அதற்கு மேலும் இவர்கள் தொண்டாற்றி இருக்கிறார்கள் என்று திரு லீ குறிப்பிட்டார்.

கொரோனா நோயாளி களைக் கவனித்துக்கொள்ளும் பணிக்கு அனுப்பப்பட்ட மூத்த இயன் மருத்துவ நிபுணர் செ. மோகனப் பிரியாவை, 31, திரு லீ எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். உட்லண்ட்ஸ் ஹெல்த் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், இப்போது கூ டெக் புவாட் மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

பிரதமர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளதன் தொடர்பில் கருத்து கேட்டபோது, 2020ல் கொவிட்-19 தலைகாட்டியபோது கிருமியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல் தாங்கள் அனைவருமே கொஞ்சம் பயந்ததாக திருவாட்டி மோகனப் பிரியா குறிப்பிட்டார்.

"மூச்சுவிட சிரமப்படும் நோயாளிகளுக்கு உதவ வேண்டிய தேவை இருந்தது. நோயாளிகளுக்குச் சில நுட்பங்களை நாங்கள் போதித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நடமாட உதவினோம். எனது பாதுகாப்பு, உடல்நலம் பற்றி என்னுடைய குடும்பத்தினரும் நானும் பயந்தாலும் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறையில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.

"சிங்கப்பூரில் பொருத்தமான சாதனங்களும் பொருத்தமான உத்திகளும் நடப்பில் இருக்கின்றன. கொவிட்-19 தொற்று காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு நோயாளி பற்றி எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறது.

"அவர் அந்தப் பிரிவில் இரண்டு வாரம் இருந்தார். அப்போதுதான் அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி இருந்தார். உடலை நகர்த்தக் கூட முடியாமல் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

"மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடந்தார். குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார். மிகவும் நிச்சயமில்லாத ஒரு காலகட்டத்தில் உடல் நலமில்லாத ஒருவர், சரியான சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியது, நான் ஏன் சுகாதாரப் பராமரிப்புத் தொழில்துறையில் வேலைக்குச் சேர்ந்தேன் என்பதை எனக்கு நினைவூட்டியது.

"நடக்க வைப்பதோடு மட்டுமின்றி வேலைக்குத் திரும்பவும் நோயாளிகளுக்கு நம் சிகிச்சை உதவி இருக்கிறது. எங்கள் பணி மூலம் கிடைக்கும் இந்த சக்தி மிகவும் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.

"முழுப் பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு இயன் மருத்துவ சிகிச்சை அளிப்பது சவாலாக இருந்தது. என்றாலும் அது எனக்கு மனநிறைவைத் தந்தது. நெருக்கடி காலத்தில் கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் உதவ முடிந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அது குறித்து நான் பெருமையடைகிறேன்," என்றாரவர்.