குடும்ப வருவாய் அதிகரித்தல், கூடுதலானோர் உயர்கல்வித் தகுதியைப் பெறுதல், பணியில் சிறப்பாக செயல்படுதல் என்று மலாய்/முஸ்லிம் சமூகம் கடந்த பத்தாண்டு களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், வீட்டுடமை, கல்வி ஆகிய அம்சங்களில் அச்சமூகத்தில் கவலை தரும் போக்குதென்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள அனைவரும் ஒருசேர முன்னேறும் வகையில் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க அரசாங்கம் பணியாற்றும் என்று தமது தேசிய தினப் பேரணி மலாய் உரையில் திரு லீ கூறினார்.
எல்லா வயது மலாய்க்காரர்களும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றுள்ளனர் என்று 2020 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டுவதை அவர் சுட்டினார்.
மலாய்க்காரர்களில் பட்டம் பெறு வோரும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களாகப் பணி செய்வோரும் கூடியுள்ள னர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஆனால், வாடகை வீட்டில் வசிக்கும் மலாய்க்காரர்களின் விகிதம் அதிகமாகியுள்ளதை அதே கணக்கெடுப்பு காட்டுகிறது என்றும் திரு லீ சொன்னார்.
கடந்த பத்தாண்டுகளில் ஓர் அறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் மலாய்க் குடும்பங்கள் இரட்டிப்பாகி உள்ளன.
கடந்த 2010 கணக்கெடுப்பின்படி 9,100 மலாய் குடும்பங்கள் அத்தகைய வாடகை வீடுகளில் வசித்தன. 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 18,600 ஆக உயர்ந்து உள்ளது.
ஒப்புநோக்க, வாடகை வீடுகளில் வசிக்கும் சீனக் குடும்பங்கள் பத்தாண்டுகளில் 28,000லிருந்து 28,700 ஆனது. வாடகை வீடுகளில் இருக்கும் இந்தியக் குடும்பங்களின் எண்ணிக்கை 4,600லிருந்து 6,800 ஆக உயர்ந்தது.
வாடகை வீட்டில் வசிக்க இதர காரணங்களைக் குறிப்பிட்ட பிரதமர், குடும்ப, நிதிச் சூழல் மாறியுள்ளதாலும் சில குடும்பங்கள் வாடகை வீட்டுக்கு மாறியிருக்கலாம் என்று கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும், அரசாங்க உதவி பெற்று சில குடும்பங்கள் சொந்த வீடு வாங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
"வாடகைக்கு இருப்பது தற்காலிகத் தீர்வு என்பதை அத்தகைய வீடுகளில் உள்ள அதிகமானவர்கள் உணர்வதற்கு நாம் உதவ வேண்டும்.
"அதோடு, வீடு வாங்கும் அளவுக்குத் தங்கள் வருவாயை உயர்த்திக்கொள்ள நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்," என்று திரு லீ கூறினார்.
அதற்குச் சமூகத் திட்டங்கள் முக்கியம் என்று வலியுறுத்திய பிரதமர், வீடு வாங்குவதை நோக்கிச் செயல்பட மலாய் குடும்பங்களுக்கு உதவும் டியான்@எம்3 திட்டத்தை சுட்டிக்காட்டினார்.
கல்வி பற்றி பேசிய பிரதமர், பின்தங்கும் மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

