அரசாங்க முஸ்லிம் பெண் தாதியர் தலையங்கி அணிய அனுமதி

அரசாங்க முஸ்லிம் பெண் தாதியர் தலையங்கி அணிய அனுமதி

2 mins read
6f7e00cc-acf3-4263-a033-89a933cc70fd
பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதியர் விரும்பினால் சீருடையுடன் தலையங்கியை அணியலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வேலை பார்க்கும் முஸ்லிம் தாதியர், வரும் நவம்பர் முதல் தங்களுடைய சீருடையுடன் தலையங்கியை, அவர்கள் விரும்பினால் அணிந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி ஆங்கில உரையில் இதனை அறிவித்தார்.

இந்த நடைமுறையை அமல்படுத்த சிங்கப்பூர் ஆயத்தமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

இப்போது சீருடை தேவைப்படும் சில வேலையிடங்களில் தலையங்கியை அணிந்துகொள்ள அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

இதன் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலையைப் பொதுவாக முஸ்லிம் சமூகம் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு இருப்பதாகத் திரு லீ கூறினார்.

இனம், சமயம் பற்றிய கொள்கைகள் அப்போதைக்கு அப்போது சரிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, தலையங்கியை அணிவதன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை தான் ஏற்றுக்கொள்வதாக திரு லீ குறிப்பிட்டார்.

அது பல முஸ்லிம் மாதர்களின் சமய நம்பிக்கையின் முக்கிய அங்கமாக ஆகி இருக்கிறது என்றார் திரு லீ.

கடந்த 2014ல் தலையங்கி பற்றி தீவிர விவாதிப்பு இடம்பெற்றபோது முஸ்லிம் தலைவர்களைப் பிரத்தியேக முறையில் தான் சந்தித்து, அரசாங்கத்தின் நிலையையும் கண்ணோட்டத்தையும் அவர்களுக்கு விளக்கியதாகவும் திரு லீ கூறினார். சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் தலைவர்களைத் தான் மீண்டும் சந்தித்ததாக பிரதமர் திரு லீ குறிப்பிட்டார்.

முஸ்லிம் தாதியர் தங்கள் சீருடையுடன் தலையங்கியை அணிய அனுமதிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அவர்களிடம் தான் கூறியதாகவும் திரு லீ தெரிவித்தார்.

இவ்வேளையில், பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் சீருடைக் கொள்கையை வரும் நவம்பர் 1 முதல் சுகாதார அமைச்சு மறுபரிசீலனை செய்யும் என்றும் முஸ்லிம் பெண் தாதியர் உள்ளிட்ட முஸ்லிம் பெண் ஊழியர்கள் தங்கள் சீருடையுடன் தலையங்கியை விரும்பினால் அணிந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.

திருத்தப்பட்ட இந்தக் கொள்கை அரசாங்க சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் 7,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் சீருடை பெண் ஊழியர்களுக்குப் பொருந்தும் என்று அமைச்சு கூறியது.

தனியார் சுகாதாரப் பராமரிப்புத் துறை முதலாளிகளும் இதைப் பின்பற்றலாம் என்றாலும் இது அவர்களுக்குக் காட்டாயமானது அல்ல என்றும் மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதனிடையே, அரசாங்கத்தின் இந்த முடிவை தான் ஆதரிப்பதாக சுகாதாரப் பராமரிப்புச் சேவைத் துறை ஊழியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.