அரசாங்க சுகாதாரப் பராமரிப்புத்துறை முஸ்லிம் பெண் தாதியர்விரும்பினால் இனி தலையங்கி அணியலாம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாக உள்ளது என்று சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
தாதிமைத் துறையில் பணியாற்ற அதீத ஆர்வம் இருந்தும் தலையங்கி அணிய முடியாத நிலையால் இந்தத் துறைக்கு வராதவர்களும் உள்ளனர் என்றும் சிலர் வேறு வழி இல்லாமல் சகித்துக்கொண்டு தயங்கி வந்துள்ளனர் என்றும் கூறினார் தாதிமைத் துறையில் பணியாற்றி பின்னர் வேறு துறைக்கு மாறிய மரியம் சுல்ஃபா.
இந்த வரவேற்கத்தக்க அறிவிப்பால் ஆர்வமுள்ள சிலர் முக்கிய சமயக் கூறாகக் கருதும் தலையங்கியை அணிந்து இந்தத் துறைக்கு வரக்கூடும் என்றார் அவர். இந்தச் செய்தி அறிந்து மகிழ்ச்சி தெரிவித்தவர்களில் ஹாஃபிஸாவும் ஒருவர்.
"பிரதமர் அறிவித்த உடனே பேரானந்தத்தில் நான் துள்ளிக்குதித்தேன். முஸ்லிம் பெண்களுக்குப் புதிய வாழ்க்கைத் தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது," என்றார் கணக்கியல் துறையில் பணியாற்றி வரும் அவர்.
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை பல பெற்றோருக்கும் மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பாக அமைந்தது.
பிரதமர் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. உடனே என் தோழிகளுக்கும் குடும்பத்தினருக்கும் இந்தச் செய்தியைக் கூறினேன்," என்றார் 48 வயது ஃபர்வின் பானு.
இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் திரு முகம்மது கவுஸ், 54, இந்த அறிவிப்பு முஸ்லிம் சமூகத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று கூறி, இதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

