இங்கு வசிக்காத வெளிநாட்டு கடலோடிகளுக்குத் தடுப்பூசி

இங்கு வசிக்காத வெளிநாட்டு கடலோடிகளுக்குத் தடுப்பூசி

1 mins read
175e5b04-f1fe-43d2-9ef4-4ea2f7e220ff
-

சிங்கப்பூரில் வசிக்காத, தகுதியுள்ள வெளிநாட்டுக் கடலோடிகள் விரும்பினால் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பு நேற்று முதல் கிடைக்கிறது என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையத்தின் ஏற்பாட்டில் நடந்த அனைத்துலக கடல் பாதுகாப்பு வாரம் என்ற வருடாந்திர கூட்டத்தில் ஆற்றிய தொடக்க உரையில் அமைச்சர் இதனை அறிவித்தார்.

இங்கு 30க்கும் அதிக நாட்கள் தங்கி இருக்கின்ற, அத்தியாவசிய சரக்கு அல்லது பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு இருக்கின்ற கடலோடிகளுக்கு இந்தத் திட்டம் உரியது.

'கடலோடிகள் தடுப்பூசித் திட்டம்' எனப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி அல்லது மொடர்னா ஊசி போடப்படும்.

உச்சநேரமற்ற இதர நேரங்களில் சிங்கப்பூரில் அணைந்து இருக்கும் உல்லாசப் பயணக் கப்பல்களைச் சேர்ந்த கடலோடிகள், கப்பல் பட்டறைகளில் பழுதுபார்க்கப்படும் கப்பல்களில் இருப்பவர்கள், பாய்மரப் படகுத் துறைகளில் அணையும் படகுகளில் இருப்பவர்கள் ஆகியோரும் மீன்பிடிக் கலன்கள், கப்பல்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் கலன்கள், வட்டார சுற்றுலா கப்பல்களைச் சேர்ந்த கடலோடிகளும் இதனால் பலன் அடையலாம்.