தலையங்கிக்கு அனுமதி: மகிழ்ச்சி, வரவேற்பு, வேண்டுகோள்

தலையங்கிக்கு அனுமதி: மகிழ்ச்சி, வரவேற்பு, வேண்டுகோள்

2 mins read
558eb580-2831-4817-aff3-f1b8d28bdab3
-

சிங்கப்பூரில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதியர் தங்கள் சீருடையுடன் தலையங்கியை அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை முஸ்லிம் தாதியரும் சமூக அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.

கலாசாரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை அது எப்படி பிரதிபலிக்கிறது என்பதை பலரும் எடுத்துரைத்தனர். இருந்தாலும் தலையங்கி தொடர்பில் என்னென்ன வழிகாட்டி நெறிமுறைகள் இடம்பெறும் என்பதன் தொடர்பில் மேலும் விவரங்கள் தேவை என்று சிலர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எந்த வகை தலையங்கியை அணிய முடியும் என்பதன் தொடர்பிலான நிபந்தனைகளை அரசு தெளிவுப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தலையங்கிக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற நல்ல செய்தியைக் கேட்டு தான் மனம் மகிழ்ந்ததாகவும் அதற்காக நன்றி கூறுவதாகவும் சிங்கப்பூர் இஸ்லாமிய கல்விமான்கள், சமய ஆசிரியர்கள் சங்கம் நேற்று கூறியது. முஸ்லிம் தாதியர் தலையங்கியை அணிய அனுமதி கிடைத்திருப்பதை தான் வரவேற்பதாக சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கம் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தங்கள் சீருடையுடன் தலையங்கி அணிய முஸ்லிம் தாதியருக்கு அனுமதி கிடைக்கும் என்று தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் அறிவித்ததைக் கேட்டு தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் போன்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இவ்வேளையில், தலையங்கி அணிய விரும்பாத தாதியரை அதை அணியும்படி வற்புறுத்த வேண்டாம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர் தங்கள் சீருடையின் ஒரு பகுதியாக தலையங்கியை அணிவதா வேண்டாமா என்பது பற்றி எப்படி முடிவு எடுத்தாலும் அவர்களின் முதல் கவனம் தங்கள் நோயாளிகளைப் பராமரிப்பதி லேயே இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

மற்றவர்களை வற்புறுத்துவது இஸ்லாம் போதனைகளுக்கு எதிரானது என்று பிரதமரின் பேரணி உரைக்குப் பிறகு மெய்நிகர் ரீதியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட தாதியருக்குத் தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் வழங்கும் என்று அமைச்சர் உறுதி கூறினார்.