செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2fc8a42d-5f03-473c-b78d-a85035bf52b6
-

வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடும் குழுக்கள் அதிகமாகும்

வீடுகளுக்குச் சென்று கொவிட்-19 தடுப்பூசி போடும் சேவைக்குத் தேவை அதிகமாகி இருக்கிறது. இதனால் அத்தகைய சேவை வழங்கும் குழுக்களின் எண்ணிக்கை செப்டம்பர் 6ஆம் தேதி வாக்கில் 33 ஆகக் கூடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் சேவையை அடுத்த மாதம் முடிவில் பூர்த்தி செய்வது சிங்கப்பூரின் இலக்காக இருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் இந்தச் சேவை தேவை என்று கேட்டு ஏறத்தாழ 700 கோரிக்கைகள் வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

இந்த முயற்சியில் உதவும்படி அமைச்சர் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஃபேஸ்புக்கில் மருத்துவர்களுக்கும் தாதியருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்குச் செவிசாய்க்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் முன்வந்த தாகவும் அவர்களில் 40 பேர் படிப்படியாக இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி இத்தகைய 11 குழுக்கள் சேவையில் இருந்தன. தடுப்பூசிக்காக குடும்பத்தினர் எட்டுவார காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. என்றாலும் மேலும் பல குழுக்கள் களத்தில் இறங்கும் என்பதால் காத்திருக்கும் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுக் குழுமங்கள் எண்ணிக்கை கூடியது

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு புதிய தொற்றுக் குழுமங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. அவற்றில் பூன் லே பேருந்து நிலைய ஊழியர்கள் தொடர்பான குழுமம் ஒன்று.

பையனீயரில் எண் 119, நேதால் ரோடு முகவரியில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிக் குழுமத்தில் நால்வருக்குத் தொற்று உறுதியானது.

மொத்தம் 67 குழுமங்கள் இருப்பதாகவும் அவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று முதல் 1,155 வரை இருப்பதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 124 பேருக்குத் தொற்று உறுதியானது. அவர்களில் 21 ேபர் பூகிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையத்துடன் தொடர்புள்ளவர்கள்.

எஞ்சிய 103 பேரில் 69 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புள்ளவர்கள். மற்ற 34 பேருக்கும் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.