சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டுகளுக்காக இனி அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம். அடையாள அட்டை, தேசிய சேவை அடையாள அட்டை, சிங்கப்பூர் கடப்பிதழ் போன்றவற்றை அடையாளத்திற்கான ஆதாரமாகக் காட்டி மக்கள் தங்களின் பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் அறிவித்துள்ளது.
இந்நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, இங்குள்ள 34 சமூக மன்றங்கள் மற்றும் வசிப்போர் குழுக்களை மக்கள் அணுகி தங்களின் சுற்றுலா பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான உதவியைப் பெறலாம். பற்றுச்சீட்டுகளைப் பயன்
படுத்தும் செயல்முறை, தொழில்நுட்பப் பயன்பாட்டில் சிரமம் இருப்பவர்களுக்கும் முதியோருக்கும் சற்று சவால்மிக்கதாக இருப்பதாக கடந்த ஆண்டு பலர் தங்களின் அக்கறையைத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பற்றுச்சீட்டுத் திட்டத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று பொதுமக்களிடமிருந்து கருத்து திரட்டியதாக பயணத்
துறைக் கழகம் கூறியது.
"பற்றுச்சீட்டைப் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஐந்து பங்காளிகளுடனும் பயணத்துறைக் கழகம் இணைந்து செயல்முறை தொடர்பில் ஆராய்ந்தது," என்று குறிப்பிட்டது கழகம்.
முன்பாக சுற்றுலா பற்றுச்சீட்டுகளை 'சிங்பாஸ்' கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். இனி, அடையாள அட்டைப் பயன்பாட்டால், சிங்கப்பூரர்கள் மேலும் எளிதான முறையில் தங்களின் சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.
சமூக மன்றங்களையும் வசிப்போர் குழுக்களையும் அணுகும்போது, பாதுகாப்புமிக்க அரசாங்கச் செயலி மூலம் ஒருவரது அடையாளப் பத்திரம் 'ஸ்கேன்' செய்யப்படும். அதையடுத்து தனிப்பட்ட ஒரு பற்றுச்சீட்டு குறியீடு தரப்படும்.
பின்னர், அங்குள்ள பணியாளர்கள் குறியீட்டைக் கொண்டு சுற்றுலாவுக்கான பதிவுக்கு உதவுவர். ஆகஸ்ட் 1 நிலவரப்படி, பற்றுச்சீட்டை ஒரு முறையாவது பயன்
படுத்தியவர்கள் 1 மில்லியன் பேர்.

