சிங்கப்பூரின் ஆகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல், ஐந்தாம் தலைமுறை (5ஜி) செயலிகளை வெளி யிடத் தொடங்கி உள்ளது. 4K காணொளிப் படங்கள் முதல் ரிமோட் கண்ட்ரோல் கார்களை ஓட்டும் வசதி தரும் விளையாட்டுகள் வரை அந்த செயலிகளில் இடம்பெற்றுள்ளன. 5ஜி கட்டமைப்புக்கான சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் 180,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அதில் இணைந்திருப்பதாக சிங்டெல் நேற்று தெரிவித்தது. ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, அந்
நிறுவனத்தில் 4.1 மில்லியன் கைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
5ஜி தொழில்நுட்பக் கட்டமைப்பு தற்போதுள்ள 4ஜி கட்டமைப்பைக் காட்டிலும் அதிக
வேகத்தில் இயங்கக்கூடியது. ஹெச்டி எனப்படும் உயர் ரக ஒலி, ஒளி அம்சங்களை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்யும் வசதியை அது வழங்குகிறது. தற்போது நடப்பில் உள்ள 4ஜி கட்டமைப்பைப் பயன்படுத்தி அவற்றைப் பதிவிறக்கம் செய்ய பல நிமிடங்கள் தேவைப்படும். மேலும், பல சாதனங்களை இணைக்கும் அளவுக்கு வலுவான அலைவரிசையை 5ஜி கொண்டிருக்கும்.

