$11.8 மில்லியன் பொய்யான கோரிக்கைகள் அளித்த 36 பேர்
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் (ஐராஸ்) $11.8 மில்லியன் அளவிலான பொய் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 36 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை உற்பத்தித்திறன் புத்தாக்க உதவி நிதித் திட்டத்தின்கீழ் சமர்ப்பிக்கப்பட்டன என போலிசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது நிறுவனத்தின் அலுவல்களை மேற்பார்வை யிடுவதில் தவறிய இயக்குநர்கள் அல்லது மேற்பார்வை யிடும் எண்ணமின்றி நிறுவன இயக்குநர்களாக மற்ற வர்களைப் பதிவு செய்தவர்கள் அல்லது இரண்டையும் செய்தவர்கள் என்று போலிசார் குறிப்பிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், ஏற்கெனவே உற்பத்தித்திறன் புத்தாக்க உதவி நிதித் திட்ட மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போலிஸ் விசாரணையின்போது பொய் கூறியதற்கும் மற்றவர்களைப் பொய்கூறத் தூண்டி யதற்கும் இவர்களுள் ஆறு பேர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொழிலதிபர் மீது மேலும்
சில குற்றச்சாட்டுகள்
சிங்கப்பூரைச் சேர்ந்த இங் யு ஸி, 34, என்ற தொழிலதிபர், $1.2 பில்லியன் மோசடியில் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். இவர்மீது $16 மில்லியன் மற்றும் 200,00 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மேலும் 20 மோசடி குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டன. இவர் நிக்கல் வர்த்தகத்தில் குறைந்தபட்சம் $1 பில்லியன் தொகையைப் போடவைத்து பல முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்மீது தற்போது 51 குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுவே சிங்கப்பூர் மோசடி வழக்குகளில் ஆகப் பெரிய வழக்கு. 'என்வி அசட் மேனேஜ்மெண்ட்' மற்றும் 'என்வி குளோபல் டிரேடிங்' ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக இருந்த இங்கிடமிருந்து ஏறக்குறைய $100 மில்லியன் சொத்துகளை வர்த்தக விவகாரத் துறை கைப்பற்றி இருக்கிறது.
பணிப்பெண் துன்புறுத்தல்: தம்பதிக்குச் சிறைத் தண்டனை
பணிப்பெண்ணை தொடர்ந்து துன்புறுத்திய தம்பதிக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்ரீ ரஹாயு, 33, எனப்படும் அந்த இந்தோனீசியப் பணிப்பெண்ணை கழிவறைத் தொட்டி நீரை குடிக்குமாறு பலவந்தப்படுத்தி யதாகவும் அழுக்கான நாப்கின் துணியால் அவரது முகத்தைத் தேய்த்ததாகவும் தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பணிப்பெண்ணின் முதலாளியான ஊய் வெய் வோயென், 37, என்பவருக்கு 20 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கணவரும் மலேசியருமான பாங் சென் யோங், 37, என்பவருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றச்செயல்கள் நிகழ்ந்த வேளையில் தம்பதியர் இருவரும் கணினிப் பொறியாளர்களாக வேலை செய்தனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

