வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் குற்றவாளியைத் தப்ப வைக்கும் நோக்கில் முன்கூட்டியே தகவல் அளித்ததற்காக நேற்று நீதிமன்றத்தில் அவருக்கு 25 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கலையரசன் கருப்பையா, 55, எனப்படும் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இதுபோன்ற மூன்று குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் இரண்டை அவர் ஒப்புக்கொண்டார்.
வீடுகள் சட்டவிரோதமாக உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளனவா என்பதை நேரில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், 2017ஆம் ஆண்டு அவ்வாறு சோதனை நடத்தச் சென்ற இடத்தில் தமந்தீப் சிங், 22, என்னும் இந்திய நாட்டவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் வேறொரு வீட்டில் குடியேறிய தமந்தீப் சிங் அங்கு ஏராளமானோரை சட்டவிரோதமாகத் தங்க வைத்தார்.
எப்போதும் 12 முதல் 13 பேர் வரை அந்த வீட்டில் காணப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரிடமும் மாத வாடகையாக சுமார் $200 வரை அவர் வசூல் செய்து வந்தார். ஒரே கூட்டமாகவும் கூச்சலாகவும் இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தைத் தொடர்ந்து நேரில் விசாரிக்க கலையரசன் அனுப்பப்பட்டார்.
ஆனால் அங்கு செல்லும் முன்னரே சோதனையிட வருவது குறித்து தமந்தீப் சிங்கிற்கு கலையரசன் துப்பு கொடுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரையும் தமந்தீப் சிங் உடனடியாக வெளியே அனுப்பிவிட்டார்.
சோதனைக்குப் பின்னர், அந்த வீட்டில் சட்டவிரோதமாக யாரும் தங்கவில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
ஆயினும், பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து 2019 ஆகஸ்ட் 24ஆம் தேதி போலிசார் சோதனை செய்தபோது அந்த வீட்டில் 19 பேர் சட்ட விரோதமாகத் தங்கி இருந்தது தெரிய வந்தது.
பின்னர் 2019 செப்டம்பர் 4 ஆம் தேதியும் போலிசார் அந்த வீட்டுக்குச் சென்றனர். அப்போது அங்கு 18 பேர் தங்கி இருந்தனர். பின்னர் அந்த விவகாரத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் போலிசார் ஒப்படைத்தனர்.
2019 செப்டம்பர் 10ஆம் தேதி கழகத்தின் சார்பில் சோதனையிட கலையரசன் அனுப்பப்பட்டபோதும் தமந்தீப் சிங்கிற்கு அவர் துப்பு தெரிவித்துவிட்டார்.
இவரது செயல்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தன.
2020 ஜனவரி 25ஆம் தேதி முதல் அவர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.

