கொவிட்-19 தடுப்பூசிக்குப் பிந்திய பக்க விளைவுகளைக் குறைப்பதாக நம்பிக்கை
சிங்கப்பூரில் இளநீர் விற்பனை கூடி இருக்கிறது.
இளநீர் பருகுவோரில் சிலர், அந்த பானம் கொவிட்-19 தடுப்பூசியால் ஏற்படக்கூடிய காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளைத் தணிக்கவல்லது என்று நம்புகின்றனர்.
இவ்வாண்டு ஜூன் மாதத்தை ஒப்பிட, ஜூலையில் இளநீர் விற்பனை 140% கூடியதாக இளநீர் பான இறக்குமதி, விநியோக நிறுவனமான 'சியாம் கோக்கநட்' தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில், இளநீர்க்குலை விற்பனையும் 70% கூடியதாக அந்நிறுவனம் கூறியது.
"இளநீர்க் கலவை பானம் தயாரிக்கவும் குழுவாகச் சேர்ந்து மொத்தமாகவும் தென்னங்குலைகளையும் இளநீர் பானங்களையும் வாங்குகின்றனர். தடுப்பூசி போட இருப்பதை அறிந்து, நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் இளநீரைப் பரிசாக அளிப்போரும் உள்ளனர்," என்றார் சியாம் கோக்கநட் நிறுவனத்தின் பொது மேலாளர் கெல்வின் நியான்.
இவ்வாண்டு முற்பாதியைக் காட்டிலும், கோல்டு ஸ்டோரேஜ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ரெட்மார்ட் போன்ற சில்லறை விற்பனைக் கடைகளில் தனது 'கோக்கோவாட்டர்' பானத்தை இருமடங்கு வேகத்தில் நிரப்பி வருவதாக 'புரூவனன்ஸ் டிஸ்டிரிபியூஷன்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பனை உயரத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட அந்நிறுவனத்தின் இயக்குநர் கெவின் டான், ஜூன் மாதத்திற்கு முன்பிருந்ததைவிட இப்போது விற்பனை 60% கூடி இருப்பதாகச் சொன்னார்.
'ஐஸ் கூல்', 'யுஎஃப்சி ரெஃப்ரெஸ்' ஆகிய வேறு இரு நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு பிப்ரவரி 22 முதல் பேரளவில் கொவிட்-19 தடுப்பூசி போடுவது தொடங்கியது. பொதுவாக, தடுப்பூசி போடுவதால் காய்ச்சல், சோர்வு, குளிர் நடுக்கம், தசைவலி ஆகிய பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பக்க விளைவுகளின் கடுமையைத் தணிக்க உதவுவதாக நண்பர்கள் கூறியதை அடுத்து, இளநீர் பானத்தை வாங்கி அடுக்கி வைத்துள்ளார் விற்பனைப் பிரதிநிதியான ஷெரில் லின், 26.
"இரண்டாவது தடுப்பூசி போட்ட பிறகு எனக்குக் காய்ச்சல் வந்தது. ஒரு போத்தல் இளநீர் அருந்தியபின் காய்ச்சலில் இருந்து விரைவாக மீண்டேன்; அதிக ஆற்றலுடன் இருப்பதாகவும் உணர்ந்தேன்," என்றார் அவர்.
ஆனால், காய்ச்சல் அல்லது தசைவலி போன்றவற்றின் கடுமையைத் தணிக்க இளநீர் உதவும் என்பதற்கு எந்தவொரு சான்றும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"பொட்டாசியம், சோடியம், மேங்கனீஸ் போன்ற மின்பகுபொருள்கள் உள்ளபோதும், சாதாரண நீரைக் காட்டிலும் இளநீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் என்பதற்குச் சான்றுகள் இல்லை," என்றார் நார்த்ஈஸ்ட் மருத்துவக் குழுமத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் டான் டெக் ஜாக்.
ஆனாலும், மற்ற விளையாட்டுப் பானங்களில் உள்ளதைப் போன்ற மின்பகுபொருள்கள் இளநீரில் உள்ளதால், வெகுநேரம் கடும் காய்ச்சலால் அல்லது மிகுந்த நீர்ச்சத்து இழப்பால் அவதிப்படுவோர் இளநீர் அருந்துவது பயனளிக்கலாம் என்று அவர் சொன்னார்.
பொதுவாக, பானங்களை அருந்துவது குளிர் நடுக்கம், அழற்சி போன்றவற்றைக் குறைக்க உதவும் என்றார் சிராங்கூனில் உள்ள மிஷன் மருந்தகத்தின் மருத்துவர் லியோங் சூன் கிட்.
"அது இளநீராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வடிசாறு (சூப்), 'ஐசோடானிக்' பானங்கள், சாதாரண நீர் போன்ற எல்லா பானங்களும் உதவும்," என்று டாக்டர் லியோங் கூறினார்.

