'பிக்பே' சேவை பயனாளர்களைக் குறிவைக்கும் மோசடிப் பேர்வழிகள்
மோசடிப் பேர்வழிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடாமல் கவனமாக இருக்கும்படி, 'பிக்பே (BigPay)' மின்னிலக்கக் கட்டண சேவைகளைப் பயன்படுத்துவோர்க்குக் காவல்துறை விழிப்பூட்டியுள்ளது. 'பிக்பே' பணியாளர்கள் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிப் பேர்வழிகள், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயலலாம் என்று காவல் துறை ஓர் அறிக்கை வழியாக எச்சரித்து இருக்கிறது. முன்பின் அறியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப் வழியாக அவர்கள் அழைக்கலாம். புதிய பண அட்டைக்கு விண்ணப்பம் செய்ய பயனாளர்களுக்கு உதவுவதாக அல்லது அவர்களின் 'பிக்பே' கணக்குகளில் பிரச்சினை இருப்பதாக அவர்கள் கூறுவர். 'பிக்பே' கணக்கு விவரங்களையும் ஒற்றைப் பயன்பாட்டுக் கடவுச்சொல்லையும் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களையும் அறிந்துகொள்வதே மோசடிப் பேர்வழிகளின் நோக்கம். தங்களது 'பிக்பே' அல்லது வங்கிக் கணக்குகளில் அனுமதி இன்றி பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதை அறிந்த பிறகே பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப் பட்டதைப் உணரலாம். அதிகாரபூர்வ இணையத்தளம் அல்லது 'பிக்பே' செயலியில் உள்ள வாடிக்கையாளர் சேவை உரையாடல் வசதி போன்றவை மூலம் தொலைபேசி அழைப்பின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யும்படி பொது மக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், வங்கிக் கணக்கு, சிங்பாஸ், 'பிக்பே' கணக்கு, ஒற்றைப் பயன்பாட்டுக் கடவுச்சொல் போன்ற விவரங்களைப் பிறருடன் ஒருபோதும் பகிரவேண்டாம் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
சினோஃபார்ம் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கானோர் விருப்பம்
கடந்த மாதம் 27ஆம் தேதி நிலவரப்படி, சினோஃபார்ம் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக 'ஐஎச்எச் ஹெல்த் கேர் சிங்கப்பூர்' குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி நோயல் அதிகாரி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்நாட்டி, மொடர்னா, சினோவேக் ஆகியவற்றுக்குப்பின் 4வது கொரோனா தடுப்பூசியாக சினோஃபார்முக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐஎச்எச் குழுமத்தின் கிளெனீகல்ஸ் மருத்துவமனை அதிகாரபூர்வமாக இன்று முதல் பொதுமக்களுக்கு அத்தடுப்பூசியைப் போட இருக்கிறது. மற்ற மூன்று தடுப்பூசிகளைப் போலவே, சினோஃபார்ம் தடுப்பூசியையும் இருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். இதனிடையே, சினோஃபார்ம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 10,000க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்து உள்ளதாக 'ராஃபிள்ஸ் மெடிக்கல்' குழுமம் தெரிவித்து இருக்கிறது. 'நார்த்ஈஸ்ட்', 'ஹெல்த்வே' ஆகிய இரு மருத்துவக் குழுமங்களும் சினோஃபார்ம் தடுப்பூசிக்கான தேவையைப் பூர்த்திசெய்யத் திட்டமிட்டு வருகின்றன. இரு தவணைகளுக்கான சினோஃபார்ம் தடுப்பூசிக்கு 'ஐஎச்எச்'சும் ராஃபிள்ஸ் மெடிக்கலும் $99 கட்டணம் வசூலிக்கின்றன. தஞ்சோங் பகாரில் உள்ள 'கிளியர்பிரிட்ஜ்' மருந்தகம் $98ம் 'நார்த்ஈஸ்ட்' குழுமம் $90ம் வசூலிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு இடைவெளித் தூதர்க்குச் சிறை, அபராதம்
கடை மேலாளர் ஒருவர் முகக்கவசம் போட்டிராததைக் கண்ட கொவிட்-19 பாதுகாப்பு இடைவெளித் தூதர் ஒருவர் அவருடன் சண்டை போட்டார். இருவரும் மாறி மாறி தகாத சொற்களால் திட்டிக்கொண்டனர். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஈசூன் சென்ட்ரல் 1ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்தத் தருணத்தில், பொங்கோல் வட்டாரத்திலும் இதுபோன்றதொரு சண்டைக்காக அலோய்சியஸ் ஹோ வெய் பெங், 40, என்ற அந்தப் பாதுகாப்பு இடைவெளித் தூதர் விசாரிக்கப்பட்டு வந்தார். இப்போது அப்பணியில் இல்லாத அந்தச் சிங்கப்பூரர்க்கு நேற்று மூன்று வாரச் சிறைத் தண்டனையும் $800 அபராதமும் விதிக்கப்பட்டது. தாக்கியது, பொது இடத்தில் சண்டையிட்டது, தொல்லை தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அலோய்சியஸ் ஒத்துக்கொண்டார். இன்னொரு பெண் தூதருடன் சேர்ந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது ஹே ஜுன், 48, என்ற ஆடவருடன் அவர் சண்டையிட்டார். மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இருவரும் காயமடைந்தனர். சண்டையைக் காண நேர்ந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விலக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்பில் ஹேவிற்குக் கடந்த ஜூன் மாதம் $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. பணியில் இருந்தபோது தூதர்கள் இருவரும் தங்களது அடையாள அட்டைகளைத் தொங்கவிட்டிருக்கவில்லை எனக் கூறப் பட்டது.

