பருவநிலை மாற்றத்தால் நாளுக்கு நாள் கணிக்க முடியாத வானிலை நிலவி வருகிறது. இதனால், வானிலை முன்னுரைப்பை அடிக்கடி அறிந்துகொள்வதை மக்கள் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அறிந்துகொண்டு தங்களின் நடவடிக்கைகளில் தகுந்த மாற்றங்களை அவர்கள் செய்துகொள்ளலாம் என்றும் அவர் நேற்று கூறினார்.
"பருவநிலை மாற்றத்தால் மழை மேலும் கடுமையாகப் பெய்து வருகிறது. அதனால், திடீர் வெள்ளம் ஏற்படுவதை முற்றிலும் தடுப்பது என்பது சாத்தியப்படாது," என்றார் அவர். பல காலமாக சிங்கப்பூரின் வானிலை நன்கு பரிச்சயமாகிவிட்ட நிலையில் சிங்கப்பூரர்கள் உள்ளனர். வானிலையில் அதிக மாற்றம் இருக்காது என்று நினைத்துவிட்டனர்.
"ஆனால் வானிலை முன்னுரைப்பை அறிந்துகொள்ளும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாட்டு மக்களாக நமது தயார்நிலையின் ஓர் அங்கம் அது," என்று இணையக் கருத்தரங்கு ஒன்றில் திருவாட்டி ஃபூ பேசியிருந்தார். பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடு சபையின் அரசாங்கங்களுக்கு இடையிலான ஆலோசனைக் குழு (ஐபிசிசி) கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து சிங்கப்பூர் மீதான தாக்கங்கள் குறித்து அமைச்சர் ஃபூ நேற்று பேசினார்.
அனைத்துலக ரீதியான வெளியேற்றங்கள் 2050ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியத்தை எட்டாவிட்டால் எதிர்பாரா வானிலையையும் பருவநிலை மாற்றத்தின் விளைவாக மேலும் கடுமையான பாதிப்புகளையும் உலகம் சந்திக்க நேரிடும் என்று மனித இனத்திற்கு பருவநிலை அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதை ஐபிசிசி அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
உலகம் வெப்பமயமாதல் சிங்கப்பூரையும் பாதிக்கும். மேலும் வெப்பமான தட்பவெப்பநிலையையும் கடல் மட்டம் உயர்தல் தொடர்பான எதிர்பாரா சம்பவங்களையும் சிங்கப்பூர் சந்திக்கும் என்று கூறப்பட்டது.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளவும் நாடளாவிய முயற்சிகள் பல நடந்து வந்தாலும் சிங்கப்பூர் முதலில் 'சமூக மீள்திறன்' போக்குடன் பருவநிலை மாற்றத்தைக் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருவாட்டி ஃபூ.
கடும் மழைப் பொழிவுக்குத் தயார்படுத்திக்கொள்ளும் நோக்கில், கடந்த பத்தாண்டு காலமாக வடிகால் பணிகளுக்காக பொதுப் பயனீட்டுக் கழகம் ஏறத்தாழ $2 பில்லியனை முதலீடு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளாக வெள்ள மீள்திறனை மேம்படுத்த கழகம் மேலும் $1.4 பில்லியனை முதலீடு செய்யவுள்ளது.
நகர்ப்புறப் பசுமையை அதிகரிப்பது, 'குளிரூட்டிச் சாயங்கள்' போன்ற மூலப்பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தி வெப்பத்தைத் தணிப்பது போன்ற அம்சங்களையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.

