கொவிட்-19 கொள்ளைநோய்ச் சூழலில் அளவுக்கு அதிகமாக வேலை பார்ப்பதாலும் வேலை, சொந்த வாழ்க்கை என்ற வேறுபாட்டை உணராமல் வாழ்வதும் அக்கறைக்குரிய அம்சங்களாகியுள்ளன.
இவ்வாண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, அளவுக்கு அதிகமாக உழைக்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இவ்வாறு வேலையில் தொடர்ந்து நீண்ட நேரம் ஈடுபட்டிருப்போருக்கு, நாள்பட்ட மனஅழுத்தம், களைப்பு, தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கைமுறை போன்றவை ஏற்படும். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், மனநலப் பிரச்சினைகள் போன்ற சிக்கல்களுக்கு இவை இட்டுச் செல்லும்.
கொவிட்-19 நெருக்கடி, ஒரு வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய இறுதி நாள், ஒன்றன் பின் ஒன்றாக பிறருடன் சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய மனஅழுத்தம், தொடர்ச்சியாக இருந்தால் மனஅழுத்த ஹார்மோன் அளவும் ரத்த அழுத்தமும் அதிகரித்தவாறே இருக்கும்.
இது பல நாட்கள் அல்லது வாரங்கள், ஏன் பல மாதங்களுக்குக்கூட நீடிக்கலாம் என்றார் மூத்த ஆலோசனை இதய நோய் நிபுணர் டாக்டர் ரோஹித் குரானா.
டாக்சி ஓட்டுநர்கள், அலுவலகப் பணியாளர்கள், வீட்டில் இருந்தவாறு வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு அதிக வேலைப்பளு தொடர்பில் இருதயப் பிரச்சினைகள் வரலாம்.
தனி ஒருவர் மட்டுமே வேலை, சொந்த வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையே சமநிலை காண்பதில் விழிப்புணர்வு பெற்றால் போதாது.
தொழிற்சங்கங்கள், அரசாங்கம் ஆகிய தரப்புகளும் ஊழியர்களின் சுகாதாரம் தொடர்பில் இணைந்து செயல்படவேண்டும் என்றார் சிங்கப்பூர் இருதய அறநிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டான் ஹுவெய் சீம்.
குறைவான வேலை நேரம், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்தும் முறையை எளிமையாக்குதல், ஊழியர்கள் தாமாகவே முன்வந்து சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதை ஊக்குவித்தல், மருத்துவப் பராமரிப்பின் பயனை மேம்படுத்துதல் போன்றவற்றை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
வாரத்தில் 40 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

