சிங்கப்பூரில் வங்கிக் கடன் ஜூலை மாதத்தில் 12% உயர்ந்தது. இதுவே மாத அடிப்படையில் பதிவாகியுள்ள ஆக வேகமான அதிகரிப்பு என்று கூறப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாகப் பல்வேறு வர்த்தகப் பிரிவுகளின் அதிகரித்த தேவைகளாலும் உத்தரவாதமில்லா தனிநபர் கடன்களாலும் இந்த அதிவேக உயர்வு பதிவாகியுள்ளது. ஒன்பதாவது மாதமாக ஜூலையில் வங்கிக் கடன் $788.48 பில்லியனுக்கு உயர்ந்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
முன்னதாக ஜூன் மாதத்தில் வங்கிக் கடன் 1.5% உயர்ந்தது. இது 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை அடுத்து பதிவான ஆக வேகமான அதிகரிப்பு ஆகும்.
வர்த்தகக் கடன்கள் ஜூலையில் 11.5% அதிகரித்து $487.18 பில்லியனாகப் பதிவாகியது. ஜூன் மாதத்தின் 1.9% அதிகரிப்பைக் காட்டிலும் ஜூலை அதிகரிப்பு பன்மடங்காகும்.
ஆகப் பெரிய வர்த்தகப் பிரிவான கட்டட, கட்டுமானத் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள், ஜூலையில் 8% அதிகரித்து $163.5 பில்லியனாகப் பதிவாகியது.
பொதுவான வரத்தகக் கடன்கள் ஜூலையில் கிட்டத்தட்ட 50% அதிகரித்து $108.09 பில்லியனாகவும் போக்குவரத்துக் கடன்கள் 73.6% அதிகரித்து $43.67 பில்லியனாகவும் பதிவாகி இருந்தன.
வேளாண்மை, சுரங்க வேலை, கட்டடக் கற்களை வெட்டி எடுத்தல் போன்ற துறைகளுக்கான கடன்கள் ஜூலையில் கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்து $5 பில்லியனாகப் பதிவாகியது. ஜூன் மாதத்தில் இது $1.84 பில்லியனாக இருந்தது.
இருப்பினும், நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், 3% குறைந்து $100.38 பில்லியனாக ஜூலையில் பதிவாகியிருந்தது. உற்பத்தித் துறைக்கான கடன்கள் 12.7% குறைந்து $25.1 பில்லியனாகப் பதிவாகியது.
ஒட்டுமொத்த பயனீட்டாளர் கடன்கள், ஜூலையில் 12.8% அதிகரித்து $301.31 பில்லியனாகப் பதிவாகியது. இதற்கு முக்கியமாக உத்தரவாதமில்லா தனிநபர் கடன்களில் பதிவான 77% அதிகரிப்பே காரணமாகும். ஜூன் மாதத்தில் உத்தரவாதமற்ற தனிநபர் கடன்கள் 1.8% அதிகரிப்பை மட்டுமே கண்டது.
பயனீட்டாளர் கடன்களில் வீடமைப்புக்கானவை 75%. அவ்வகையில் வீடமைப்புக் கடன்கள் ஜூலையில் 1.2% அதிகரித்து $208.68 பில்லியனாகப் பதிவாகியது.
கடன் அட்டைக்கான கடன்கள் 6.9% அதிகரித்து $10.17 பில்லியனாகப் பதிவானது. இதற்கிடையே, கார்களுக்கான கடன்கள் 0.3% குறைந்து $8.37 பில்லியனாகப் பதிவாகியது.
ஆண்டு அடிப்படையில் மொத்த வங்கிக் கடன் ஜூலையில் 16.2% அதிகரித்துள்ளது.
பயனீட்டாளர் கடன்கள் 18.4% அதிகரித்திருந்தன. வர்த்தகக் கடன்கள் 14.8% அதிகரித்திருந்தன.

