சிங்கப்பூரின் இணைய வர்த்தக விற்பனைகளின் மதிப்பு 2026ஆம் ஆண்டுக்குள் $13.4 பில்லியனை எட்டலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் நிர்வாக ஆலோசனை நிறுவனமான 'பெய்ன் & கம்பெனி' நேற்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கொள்ளைநோயால் அனைத்திலும் மின்னிலக்கமயம் தலைகாட்டி வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரின் இணையப் பொருளியலும் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.
தென்கிழக்காசிய இணைய வர்த்தகத்தின் மொத்த விற்பனைப்பொருள் மதிப்பு, இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரட்டித்து, கிட்டத்தட்ட 254 பில்லியன் அமெரிக்க டாலராக (S$341 பி.) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் இந்த முன்னுரைப்பு 132 பில்லியன் அமெரிக்க டாலராக (S$177 பி.) இருந்தது. இவ்வாண்டிலேயே சிங்கப்பூரின் இணைய விற்பனைகள் ஏறத்தாழ 8 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று கூறப்படுகிறது.
கொள்ளைநோய் தொடங்கியது முதல், கடந்த 12 மாதங்களில் இணையம் வழி பொருள் வாங்கியோர் அல்லது வட்டாரத்தில் புதிய மின்னிலக்கப் பயனீட்டாளர்கள் ஆனவர்கள், 70 மில்லியன் பேர் என்று கணிக்கப்படுகிறது.
மேலும், பலதரப்பட்ட பொருட்களை இணையம் மூலம் வாங்கும் ஆர்வம், தென்கிழக்காசிய பயனீட்டாளர்களுக்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது. ஆறு நாடுகளைச் சேர்ந்த 16,700க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் மளிகைப் பொருட்களை முதன்முதலாக இணையத்தில் வாங்கியோர் 59 விழுக்காட்டினர் என்று தெரியவந்தது.

