செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
314ffd09-ab57-4ef7-a3b6-5e2e04f51cb4
-
Google News Preferred Icon

மானபங்கம்: பல்கலைக்கழக மாணவர் மீதான குற்றம் நிரூபணமானது

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவரான 25 வயது லீ யான் ரூ மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண்ணை லீ 2019ல் மானபங்கம் செய்திருந்ததாகக் கூறப்பட்டது. தான் மானபங்கம் செய்யவில்லை என்றும் தன் விருப்பத்திற்கு ஒத்துழைப்பது போல் அந்தப் பெண் நடந்து கொண்டார் என்றும் லீ கூறியிருந்தார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் லீ பாலியல் செயலில் ஈடுபட்டதாக நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி குறிப்பிட்டார். இன்ஸ்டகிராம் வழி அந்தப் பெண்ணுக்கு லீயின் அறிமுகம் கிடைத்ததாக அறியப்படுகிறது. சேர்ந்து படிப்பதற்காக இருவரும் சந்தித்துக்கொண்டதை அடுத்து லீ குற்றம் புரிந்ததாகக் கூறப்பட்டது. நேற்று லீக்கு $20,000 பிணைத் தொகை விதிக்கப்பட்டது. அடுத்த மாதம் 18ஆம் தேதியன்று லீக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோதக் குதிரைப் பந்தய

நடவடிக்கை தொடர்பில் விசாரணை

சட்டவிரோதமான குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் பத்து பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈசூன் அவென்யு 5ல் போலிசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது பத்து பேரும் சிக்கினர்.

இவர்கள் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் உள்ள அந்தப் பத்து பேரில், பந்தயப் பிடிப்பைக் கையாண்டதன் சந்தேகத்தில் 72 வயது ஆடவர் ஒருவரும் அடங்குவார். 58 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு ஆடவர்கள், ஒரு மாது ஆகியோர் பந்தயம் கட்டியதாகக் கூறப்படுகிறது. இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டதன் தொடர்பிலும் மாது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர்கள் இருந்த இடத்தில் $1,700 ரொக்கம், இரண்டு கைபேசிகள், பந்தயம் கட்டுவதற்கான பொருட்கள் போன்றவற்றையும் போலிசார் கைப்பற்றினர்.