இணைய ஊடுருவிகளுக்கு $202,000 ரொக்க வெகுமதி

இணைய ஊடுருவிகளுக்கு $202,000 ரொக்க வெகுமதி

2 mins read
baa9bf44-a13b-4e21-8750-ea238c9ed169
-

அரசாங்க முக்கிய இணைய முறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்தல்

சிங்பாஸ் போன்ற முக்கியமான அரசாங்க இணைய முறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடித்து அதைப் பற்றி தன்னிடம் தெரிவிக்கும் நெறிமுறை இணைய ஊடுருவிகளுக்கு $202,000 (US$150,000) வரை ரொக்க வெகுமதி வழங்கப்படும் என்று அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்) தெரிவித்துள்ளது.

பாதிப்புகளைக் கண்டறியும் வெகுமதித் திட்டம் பற்றி நேற்று அறிவித்த 'கவ்டெக்' அமைப்பு, இதன் மூலம் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அல்லது ஊடுருவிகள் சமூகத்தினரை ஈர்த்து, அதன் மூலம் உத்தேச இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளை முன்னரே கண்டறியும் முயற்சியாக இது இருக்கும் என்று விளக்கியது.

இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து அது பற்றி தெரிவிப்போருக்கு US$200 முதல் US$5,000 ($270 முதல் $6,750) வரை, அவர்கள் தெரிவிக்கும் இணைய பாதுகாப்புக் குறைபாடுகளின் அபாயத்தைப் பொறுத்து வெகுமதி அளிக்கப்படும்.

"கூகல், மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியும் திட்டத்தை ஒரு அளவுகோலாக வைத்து நாங்களும் இந்தப் புதிய திட்டத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளோம்.

"மிக முக்கியமான தகவல்தொடர்பு தொழில்நுட்ப முறைகளையும் தனிப்பட்ட தரவுகளையும் பாதுகாப்பதில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கடப்பாடு இதில் வெளிப்படுகிறது," என்று 'கவ்டெக்' அமைப்பு நேற்று தனது அறிக்கையில் விவரித்தது.

இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறியும் இந்தத் திட்டம் அரசாங்கத்தின் மூன்று இணையத் திட்டங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

சிங்பாஸ் மற்றும் கார்ப்பாஸ், மனிதவள அமைச்சு மற்றும் மத்திய சேம நிதிக் கழகத்தின் உறுப்பினர் மின்னியல் சேவைகள், மனிதவள அமைச்சின் வேலை அனுமதி ஒருங்கிணைந்த முறை ஆகியவையே அந்த மூன்று இணையத் திட்டங்கள்.

முக்கியமான இதர தகவல்தொடர்பு தொழில்நுட்ப முறைகளும் படிப்படியாக இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

முக்கியமான அரசாங்க மின்னிலக்க சேவைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியும் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிப்போர், மிகக் கடுமையான தேர்வுக்குப் பிறகு திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுவர்.

அவ்வாறு அனுமதிக்கப்படுவோர் குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள்தான் இணையப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

ஒருவேளை அவர்கள் கொடுக்கப்பட்ட விதிமுறையை மீறினால், அவர்களின் மெய்நிகர் இணைய இணைப்புக்குத் தடைவிதிக்கப்படும்.

இதனால், அரசாங்கத்தின் மிக மிக முக்கியமான தரவுகள் ஊடுருவப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படும் என்றும் கவ்டெக் அமைப்பு விளக்கியது.