கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ரிவர் வேலி பள்ளி மாணவர் குடும்பத்தினரைச் சந்தித்தார்

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ரிவர் வேலி பள்ளி மாணவர் குடும்பத்தினரைச் சந்தித்தார்

2 mins read
b7c2d5d6-2086-4d3a-a20e-22264c63325b
-

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மாணவர், சம்பவம் நடைபெற்ற ஜூலை 21ஆம் தேதிக்குப் பிறகு தனது குடும்பத்தினரை கடந்த ஒரு வாரத்தில் பலமுறை சந்தித்து உள்ளார்.

பெயர் குறிப்பிட தடை விதிக்கப்பட்டிருக்கும் அந்த 18 வயதுக்கு உட்பட்ட மாணவர், இனி சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார். அங்கு அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடும் வழக்கறிஞரும் அவரைச் சந்திக்கலாம்.

அவர் இனி போலிஸ் கன்டோன்மண்ட் வளாகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்படத் தேவையில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேத்தி சூ நேற்றுத் தெரிவித்தார்.

அந்த மாணவருக்காக வாதாடும் வழக்கறிஞர் திரு சுனில் சுதீசன், இந்தச் செய்தியை காணொளி இணைப்பு வழியாக நடந்த விசா ரணையில் பங்கேற்ற அந்த மாணவரிடம் விளக்கி விடுங்கள் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்ள, அதுபற்றி அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாணவரிடம் விளக்கினார். தனக்கு அதுபற்றி புரிந்தது என்று அம்மாணவர் கூறினார்.

கடந்த ஜூலை 20ஆம் தேதி தாம் படிக்கும் பள்ளியில் 13 வயது சக மாணவரைக் கொலை செய்த குற்றத்தை அம்மாணவர் எதிர்நோக்குகிறார். அப்போதிலிருந்து அவர் மனநலப் பரிசோதனைக்காக விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனநலப் பரிசோதனை மதிப்பீடும் குற்றம் தொடர்பான விசாரணையும் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் மாணவரைச் சந்திக்க அவரது குடும்பத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தொலைபேசி வழியாக மாணவரிடம் பேச, திரு சுனில் கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் காணொளி வழி மாணவரிடம் பெற்றோர் உரையாட ஆகஸ்ட் 13ஆம் தேதி போலிஸ் ஏற்பாடு செய்தது.

இந்த வழக்கு அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எவ்வித பிணையும் வழங்கப்படவில்லை.

பொதுவாக கொலைக் குற்றம் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.