கவிமாலையின் 255வது மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி மெய்நிகர் வழியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர்க் கவிஞர்கள், கவிதை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
'படித்ததில் பிடித்தது' அங்கத்தில் தெரிவுசெய்த யுகபாரதியின் கவிதைகளைக் கவிமாலைக் கவிஞர்கள் படைத்தனர். தலைவர் இன்பாவின் உரையில் மறைந்த சிங்கப்பூர் மரபுக் கலைஞர் திரு ஆனந்தக்கண்ணனுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
'கவியாடும் முன்றில்' என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பகிரப்பட்ட கவிதைகள் பற்றிய தனது பார்வையை முன்வைத்தார் கவிஞர் மா. அசோக்குமார்.
இம்மாதம் 'அலை அலையாய்' எனும் தலைப்பில் வந்த போட்டிக் கவிதைகளின் விமர்சனத்தை கவிஞர் ராஜு ரமேஷ் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து போட்டிக் கவிதைகளைக் கவிஞர்கள் வாசித்தபின் போட்டியின் பரிசு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மரபுக்கவிதைக்கான முதல் பரிசு கவிஞர் கி.கோவிந்தராசுக்கும் பொதுப்பிரிவில் முதல் பரிசு இரா. அருள்ராஜுக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் கவிஞர் யுகபாரதி "இன்றைய திரைப்படப் பாடல்களின் அழகியல் போக்குகள்" என்ற தலைப்பில் சுமார் ஒரு மணி நேரம் சுவைபட தனது திரையனுபவங்களை விவரித்தார். தான் ஒரு பாடலாசிரியராகவோ கவிஞராகவோ இவ்வுலகில் அறியப்படுவதைவிட "நல்ல மனிதன்" என்று அனைவராலும் அடையாளப்படுத்தப்படுவதையே பெருமை எனக் கூறினார்.
இறுதியாக நன்றியுரையுடன், அடுத்த மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பாக 'சலசலக்கும் சருகுகள்' எனும் அறிவிப்புடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

