வேலையிடப் பாகுபாடு தொடர்பில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்
வேலையிடப் பாகுபாடு சிங்கப்பூரில் மோசமடைந்து வரும் ஒரு பிரச்சினை இல்லை என்றாலும் சில ஊழியர்கள் அந்நிலைக்கு ஆளாவது உண்டு என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். எனவே, இது தொடர்பில் சட்டம் உருவாக்கப்பட்டால் தற்போது வேலையிடப் பாகுபாட்டிற்கு எதிரான வழிகாட்டுதல்கள் மேலும் வலுப்பெறும் என்றார் அவர்.
வேலையிடப் பாகுபாட்டை எதிர்கொள்ள நடைமுறையில் இருக்கும் டாஃபெப் (TAFEP) எனும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்பு வழிகாட்டுதல்களைச் சட்டபூர்வமாக்கும்போது, வேலையிடத்தில் நியாயமான நடைமுறை இருப்பது குறித்து சிங்கப்பூர் வெளிப்படையாக நடந்துகொள்கிறது என்பதையும் வலியுறுத்தும் என்று நேற்று காலை வானொலிப் பேட்டி ஒன்றில் டாக்டர் டான் பகிர்ந்துகொண்டார்.
வேலையிடப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தின பேரணி உரையில் அறிவித்திருந்தார். முதலாளிகளுக்கிடையே ஏற்படக்கூடிய பாகுபாட்டைக் கையாள 'டாஃபெப்' உதவுகிறது.
"கொள்ளைநோய் காரணத்தால் நாம் பல திட்டங்களில் ஈடுபடவில்லை, இப்போது மீண்டும் முன் நின்று செயல்படத் தயாராக இருக்கிறோம். நிறுவனங்கள் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், தொழில்துறை உருமாற்றம் வேண்டும், புத்தாக்கம் வேண்டும் என்றெல்லாம் நாம் ஊக்குவிக்கிறோம்.
"அதே சமயம், நம் உள்ளூர் ஊழியர்களுக்கான பாதுகாப்பு இருப்பதையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்," என்றார் டாக்டர் டான்.
ஆண் பெண் வேறுபாடு, வயது, இனம், சமயம், குறைபாடு இருத்தல் போன்ற அம்சங்கள், பாகுபாட்டை எதிர்க்கும் இப்புதிய சட்டங்களின்கீழ் வரும். இதனால், குற்றம் புரியும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அமலாக்க அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
இருப்பினும், புதிய சட்டத்தால் சிங்கப்பூரில் தங்களின் நிறுவனங்களை அமைக்கச் சிலர் தயங்கலாம் என்ற அக்கறைக்குரிய அம்சமும் பேசப்படுகிறது. அந்நிலை நேராது என்றார் டாக்டர் டான்.
பாகுபாடு போக்கு இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்களிடம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். தவறு செய்யக்கூடிய அந்தக் குறைந்த எண்ணிக்கை நிறுவனங்களையும் சரியான திசைக்குத் திருப்ப சட்டம் உதவும் என்றார்.
நாடு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றால், அனைவரையும் வரவேற்கும் ஓர் இடமாக சிங்கப்பூர் இருக்க வேண்டும். புதுத் திறன், திறன் மேம்பாடு தொடர்பிலான முயற்சிகளும் உள்ளூர் ஊழியர்களுக்காக மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
"மாற்றம் ஒன்றே மாறாதது. அதைப் புரிந்துகொண்டு நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும், புத்தாக்கமிக்க ஒரு சமூகமாக விளங்க வேண்டும். அதுவே நம் இலக்கு," என்றார் டாக்டர் டான்.

