முதுமைக்கால மறதிநோயுடன் தவிக்கும் நோயாளிகளுக்காகவும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்காகவும் புதிய ஆதரவுத் திட்டங்களை 'டிமென்ஷியா சிங்கப்பூர்' நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கு முன் 'அல்ஸய்மெஸ் நோய்ச் சங்கம்' என்ற பெயரில் இது 1990ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது.
வளங்கள் கொண்ட இணையத்தளம், உறுப்பினர் திட்டம், வர்த்தகங்களுக்காக அனைவரையும் உள்ளடக்குவதற்கான உதவித் தொகுப்பு, உதவி பெறும் சூழலை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் மூலம் அதிபர் ஹலிமா யாக்கோப் தமது உரையில் நேற்று அறிவித்தார். இணையத்தளத்தின் வளங்களும் வர்த்தகங்களுக்கான உதவித் தொகுப்பும் இம்மாதம் நடைமுறைப்படுத்தப்படும். உறுப்பினர் திட்டமும் உதவி பெறும் சூழலை ஏற்படுத்தித் தரும் திட்டமும் நவம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டது. டிமென்ஷியா நோயாளிகள், பராமரிப்பாளர்கள், நிபுணர்கள், பொதுமக்கள் போன்றோருக்கு இணையத்தளத்தின் வளங்கள் துணைபுரியும் என்று கூறப்பட்டது.
உறுப்பினர் திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ள கைபேசிச் செயலி, டிமென்ஷியா நோயாளிகள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
உதவி பெறும் சூழலை அமைத்துத் தரும் திட்டம், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கொண்ட ஒரு புளோக்கில் அமைந்திருக்கும். டிமென்ஷியா பராமரிப்பு வசதிகளும் ஆதரவும் உள்ளடங்கிய அந்த புளோக்கின் வீடுகளில் டிமென்ஷியா நோயாளிகள் தொடர்ந்து வசிக்க முடியும்.
ஞாபக மறதி, மொழி மற்றும் சிக்கலைத் தீர்க்கும் ஆற்றலை இழத்தல் போன்ற பலதரப்பட்ட அறிகுறிகளை 'டிமென்ஷியா' என்ற சொல் பொதுவாகக் குறிக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர் பத்தில் ஒருவருக்கு, அதாவது கிட்டத்தட்ட 82,000 பேருக்கு டிமென்ஷியா இருப்பதாக 2018ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகம் அதிகரித்து வரும் நிலையில், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார் திருவாட்டி ஹலிமா.
உள்ளூர்வாசிகளில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 15.2 விழுக்காட்டினர் ஆவர் என்று சிங்கப்பூரின் 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் முதியோரின் எண்ணிக்கை 9 விழுக்காடாக இருந்தது.