தமிழ் முரசு நாளேட்டை 72 விழுக்காடு வாசகர்கள் கடைகளில் வாங்கிப் படிக்கின்றனர்
சிங்கப்பூரின் பிரபல எஸ்பிஎச் நிறுவனம், அச்சுப்பிரதி, மின்னிலக்கம், வானொலி, சஞ்சிகை என பல தரப்பட்ட ஊடகங்களை பல்வேறு தளங்களில் நடத்தி வருகிறது.
இதற்கு சிங்கப்பூரர்கள் அமோக ஆதரவு அளித்து வருவது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட எஸ்பிஎச்சின் ஊடகத் தளங்களை பத்தில் ஏழு சிங்கப்பூரர்கள் பயன்படுத்து வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்காக கட்டணத்தை செலுத்தவும் வாசகர்கள் தயாராக இருக்கின்றனர்.
எஸ்பிஎச்சின் அச்சுப்பிரதி, இணையத் தளம், மின்னிலக்கம் மற்றும் செயலி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரில் ஐவரில் மூவர் வாரத்தில் ஒருமுறையாவது படிக்கின்றனர். இதில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளேடு 44 விழுக்காடு வாசகர்களுடன் முன்னிலை பெற்றுள்ளது. லியன்ஹ சாவ்பாவ் (17%), பிஸ்னஸ் ைடம்ஸ் (11%) ஆகியவை 2, 3வது நிலைகளில் உள்ளன.
எஸ்பிஎச் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஜிஎஃப்கே எனும் ஆய்வு நிறுவனம், இந்த முக்கிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. டிசம்பர் 2020 முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரையில் 3,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
எஸ்பிஎச்சின் ஊடகங்களைப் பார்ப்பதற்கு கட்டணங்களைச் செலுத்தவும் வாசகர்கள் தயாராக இருப்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
எஸ்பிஎச்சின் அனைத்து தினசரி வாசகர்களில் மூன்றில் ஒரு பங்கினர் (35%) தற்போது சந்தாதாரர்களாக உள்ளனர். இதில் ஸ்ட்ெரய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகியவை அதிக சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
தமிழ் முரசைப் பொறுத்தவரை அச்சுப்பிரதியை அதிகமானோர் வாங்கிப் படிக்கின்றனர். அதாவது தமிழ் முரசு வாசகர்களில் 72 விழுக்காட்டினர் அச்சுப் பிரதியை வாங்குகின்றனர்.
லியன்ஹ வான்பாவ்வை 70 விழுக்காட்டினரும் ஷின் மின் நாளிதழை 71 விழுக்காட்டினரும் பெரித்தா ஹரியான்/மிங்குவை 66 விழுக்காட்டினரும் அச்சுப்பிரதியை வாங்கிப் படிக்கின்றனர்.
ஆனால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் பிஸ்னஸ் டைம்ஸின் அச்சுப் பிரதிகளைவிட அவற்றின் மின்னிலக்கப் பிரதிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது அந்த இரண்டு நாளிதழ்களின் அச்சுப் பிரதி வாசர்களைவிட மின்னிலக்க வாசகர்கள் முந்திவிட்டனர்.
மேலும் மின்னிலக்கம், இணையத்தளம், அச்சுப்பிரதி என அனைத்து ஊடகத் தளங்களிலும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளேடு முன்னிலை வகிக்கிறது.
எஸ்பிஎச்சின் தலைமை வர்த்தக அதிகாரியான இக்னாஷியஸ் லோ, விளம்பரதாரர்களுக்கு மதிப்புமிக்க தாக்கத்தை உருவாக்க எஸ்பிஎச் பல்வேறு தளங்களில் ஊடகங்களை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

