ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து கடனாக ஏறத்தாழ $1.24 மில்லியன் லஞ்சம் வாங்கிய நிலப்போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணை குழும இயக்குநர் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஹென்றி ஃபூ யுங் தை, 47, என்ற அந்த முன்னாள் இயக்குநருக்குச் சூதாட்ட பழக்கம் காரணமாக பெரும் கடன் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர், $1,156,250 செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்தத் தொகை அவர் திருப்பிச் செலுத்தாத தொகைக்குச் சமமானது.
சிங்கப்பூரரான அந்த முன்னாள் இயக்குநர் ஏற்கெனவே ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஏமாற்றியது உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர், 2014ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து கடனாக பணம் தரும்படி நச்சரித்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஹென்றி ஃபூ 1999ல் இந்த ஆணையத்தில் சேர்ந்தார். அவர் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் தீவு தழுவிய வழித்தடங்களுக்கான துணை குழும இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்தப் பதவியில், பல எம்ஆர்டி நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் அவருக்கு இருந்தது.
கடன் கொடுத்த ஒப்பந்தக்காரர்கள், துணை ஒப்பந்தக்காரர்களுக்குக் கைமாறாக இந்த ஆணையத்தின் ஏலக்குத்தகைகள் தொடர்பான ரகசிய தகவல்களை அந்த இயக்குநர் பகிர்ந்துகொண்டார் அல்லது இந்த ஆணையத்துடன் கூடிய தொழில் அனுகூலங்களை அவர்களுக்குப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார் என்றும் கூறப்பட்டது.
ஹென்றி ஃபூ, 2019 செப்டம்பரில் இந்த ஆணையத்தில் இருந்து விலகிவிட்டார். அவர் துணை ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து கடன் வாங்குவதாக அனாமதேய புகார் தாக்கலானதை அடுத்து லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்தது.
இதன் விளைவாக 2018 அக்டோபரில் இந்தக் குற்றச்செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
ஹென்றி ஃபூவுடன் இதர ஏழு பேர் மீதும் சைனா ரயில்வே டனல் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஹென்றி ஃபூவுக்குச் சூதாட்டப் பித்து உண்டு என்பது மனநல நிலையம் மூலம் தெரியவந்தது.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதைத் தண்டனையைக் குறைக்கும் ஓர் அம்சமாக எடுத்துக்கொள்ள இயலாது என்று முடிவு செய்தார்.

