பெண்ணை மிரட்டிய ஆடவருக்கு மூன்று மாதங்கள், மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருமணமாகி பிள்ளைகள் உடைய அந்த 32 வயது அப்பெண்ணுடன் அந்த 29 வயது சிங்கப்பூர் ஆடவர் உறவு வைத்திருந்தார்.
இனி உறவு வேண்டாம் என்று அப்பெண் கூறியதும், தம்முடன் பாலியல் உறவில் ஈடுபட்டபோது எடுத்த படங்களையும் காணொளிகளையும் அப்பெண்ணின் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காட்டப்போவதாக அந்த ஆடவர் மிரட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் பிறரின் வீட்டிற்கு நுழைந்தது, மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உறவை முறித்துக்கொள்ள அப்பெண் விரும்பினார்.
ஆனால் அதை அந்த ஆடவர் ஏற்கவில்லை. தம்முடன் தொடர்ந்து உறவு வைத்திருக்க வேண்டும் என அவர் அப்பெண்ணை வற்புறுத்தினார்.
மறுத்தால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளப்போவதாக அவர் அப்பெண்ணை மிரட்டினார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று அப்பெண் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தம்முடன் உறவு வைத்திருப்பதாக அப்பெண்ணின் கணவரிடமும் பிள்ளைகளிடமும் தெரிவிக்கப்போவதாகவும் அந்த ஆடவர் மிரட்டினார்.
இதற்குப் பயந்து அந்த ஆடவர் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு அப்பெண் பதிலளித்து வந்தார். அதே சமயத்தில் அவரைத் தவிர்க்க முயன்றார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதியன்று அந்த ஆடவர் முன்னறிவிப்பின்றி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் நுழைந்த அந்த ஆடவரை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்படி அப்பெண் கேட்டுக்கொண்டார். அப்போது அப்பெண்ணின் அந்தரங்கப் படங்களை அவரது குடும்பத்தினருக்குக் காட்டப்போவதாக அந்த ஆடவர் மிரட்டினார்.
இதுகுறித்து போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பெண் வசிக்கும் கொண்டோமினியத்துக்கு போலிஸ் அதிகாரிகள் சென்றனர். அடுத்து என்ன நடந்தது என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதியன்று அப்பெண்ணுடன் தொடர்புகொள்ள அந்த ஆடவர் முயன்றார். அவரைச் சந்திக்க அப்பெண் மறுத்ததும் அதே மிரட்டலை அவர் முன்வைத்தார். இதையடுத்து அந்த ஆடவரை அப்பெண் சந்தித்தார். அன்றிரவு
அந்த ஆடவருக்கு எதிராக அப்பெண் போலிசில் புகார் செய்தார்.
கடந்த மே மாதம் 10ஆம் தேதியன்று அந்தப் பெண் வசிக்கும் கொண்டோமினியத்துக்கு அந்த ஆடவர் சென்றார். அனுமதி இன்றி உள்ளே சென்ற அவர் பிடிபட்டார்.

