மின்சார வாகனங்களுக்காக சிங்கப்பூரில் அடுத்த 12 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட மின்னூட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
வீவக பேட்டைகள், தொழிற்பேட்டைகள் மற்றும் மத்திய வர்த்தக வட்டாரம் போன்றவற்றில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொது கார்
நிறுத்தப் பகுதிகளில் இவை நிறுவப்படும். முதற்கட்ட மின்னூட்ட நிலையங்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் மத்திய வட்டாரத்தில் 210 மின்னூட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். அதேபோல தீவின் வடக்குப் பகுதியில் 50, வடகிழக்குப் பகுதியில் 100, கிழக்கு வட்டாரத்தில் 120 மற்றும் மேற்கு வட்டாரத்தில் 140 என தொடர்ந்து 620 மின்னூட்ட மையங்களை ஓராண்டு காலத்திற்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. நகர மறுசீரமைப்பு ஆணையமும் நிலப் போக்கு வரத்து ஆணையமும் நேற்று இதனைக் கூட்டாகத் தெரிவித்தன.
கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய வட்டாரங்களில் மின் வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்களை ஏற்படுத்துவதற்கான ஏலக்குத்தகை கம்ஃபர்ட்டெல்குரோ இன்ஜினியரிங் மற்றும் இன்ஜீ சௌத் ஈஸ்ட் ஏஷியா ஆகிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல வடக்கு மற்று வடகிழக்கு வட்டாரங்களுக்கான ஏலக்குத்தகை வேறு சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் பொது கார்ப் பேட்டைகளில் 40,000 மின்னூட்ட மையங்களை ஏற்படுத்துவது தேசிய இலக்கு. அதன் முதல் படியாக, 600 மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
நிலப் போக்குவரத்துத் தொழில்துறை தினத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், மின்னூட்டும் கட்டமைப்பு என்பது மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்தும் சிங்கப்பூர் உத்தியின் முக்கிய அம்சம் என்றார்.

