இத்தாலியின் ரோம் நகரில் இன்றும் நாளையும் நடை
பெறும் ஜி20 சுகாதார அமைச்சர்கள் சந்திப்பில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொள்கிறார். ஜி20 சுகாதார அமைச்சர்கள் சந்திப்பில் 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் பங்கேற்றுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளும் இச்சந்திப்பில் பங்கேற்கும். பல்வேறு அனைத்துலக, வட்டார அமைப்புகளும் இந்த வருடாந்திர சந்திப்பில் கலந்துகொள்வது வழக்கம். இத்தாலி நாட்டின் அழைப்பின் பேரில், கௌரவ நாடு என்ற முறையில் சிங்கப்பூரும் இவ்வாண்டு இச்சந்திப்பில் பங்கேற்கிறது. ஜி20 நாடுகள் அமைப்பின் நடப்பு தலைமைத்துவம் இத்தாலி வசம் உள்ளது.
இரு நாள் சந்திப்பின்போது உலக சுகாதாரப் பிரச்சினைகளை பங்கேற்பாளர்கள் ஆராய்வார்கள். நீடித்து நிலைக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளில் கொவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம், எதிர்கால சுகாதார அவசரநிலைக்கான ஆயத்த ஏற்பாடுகளை மேம்படுத்துதல் போன்றவை குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, அதனை சரிசமமாகப் பிரித்துப் பயன்பெறுவது போன்றவற்றுக்கான உலகளாவிய உத்தியும் இச்சந்திப்பின்போது வரையப்படும்.
சந்திப்பில் பங்கேற்கும் திரு ஓங், மற்ற நாடுகளின் சுகாதார அமைச்சர்களைச் சந்திப்பார் என்றும் அவருடன் அமைச்சின் மூத்த அதிகாரிகளும் இணைந்துகொள்வதாகவும் சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

