வண்ணத்துப்பூச்சி பூங்கா, நாய்கள் ஒன்றுகூடுவதற்கான இடம் உள்ளிட்ட அம்சங்களுடன் புக்கிட் கொம்பாக் பகுதியில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் பரப்பளவு 4.8 ஹெக்டர். இது, ஏழு காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமம். பூங்கா, கடல்மட்டத்திற்கு மேல் 45 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
பூங்காவில் சில அம்சங்களைச் சேர்க்குமாறு அது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை சந்திப்புகளில் அந்தப் பேட்டையின் குடியிருப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததாக சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான லோ யென் லிங் தெரிவித்தார்.
பூங்காவில் தோட்ட வேலைக்கான இடங்களை 70லிருந்து 120க்கு அதிகரிப்பதும் நாய்கள் ஒன்றுகூடுவதற்கான இடமும் அவற்றில் அடங்கும்.
இதற்கு முன் தாங்கள் வளர்க்கும் நாய்களைக் குடியிருப்பாளர்கள் தொலைவில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது.
இப்போது புக்கிட் கொம்பாக்கிலேயே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. இன்றைய தொடக்க நிகழ்ச்சியின்போது புக்கிட் கொம்பாக் பூங்கா 150 குடியிருப்பாளர்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
வர்த்தக, தொழில் அமைச்சரும் சுவா சூ காங் குழுத் தொகுதி மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருமான கான் கிம் யோங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து பூங்காவில் மரம் ஒன்றை நட்டனர்.

