ஜோகூருக்கு 100,000க்கு மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை சிங்கப்பூர் வழங்கும்

2 mins read
4a729b8e-a34b-4801-8981-520166e347f4
-

சிங்­கப்­பூர் அர­சாங்­கம் 100,000க்கு மேல் போடக்­கூ­டிய ஃபை­சர்-பயோ­என்­டெக் தடுப்­பூசி மருந்­து­களை மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­துக்கு வழங்­கும் என்று அம்­மா­நி­லத்­தின் முதல் அமைச்­சர் ஹஸ்னி முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

நேற்று நடை­பெற்ற ஜோகூர் சட்­ட­மன்­றக் கூட்­டத்­தில் எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்­குப் பதில் அளித்த திரு ஹஸ்னி, "ஜோகூர் மாநில அர­சாங்­கத்­துக்­கும் சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­துக்­கும் இடையே நிலவி வரும் நீண்­ட­கால நல்­லு­ற­வின் அடிப்­ப­டை­யில், சிங்­கப்­பூர் இவ்­வாண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி 20,000 தடவை போடக்­கூ­டிய சினோ­வேக் தடுப்­பூசி மருந்­து­களை ஜோகூ­ருக்கு வழங்­கி­யது.

"விரை­வில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் 100,640 தடவை போடக்­கூ­டிய ஃபை­சர் தடுப்­பூசி மருந்­து­களை ஜோகூர் அர­சாங்­கத்­துக்கு வழங்­கும்.

"இதைத் தவிர, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் அர­சாங்­கம் வழங்­கிய 300,000 தடவை போடக்­கூ­டிய சைனோ­ஃபார்ம் தடுப்­பூசி மருந்­து­களை ஜோகூர் அர­சாங்­கம் பெற்­றுக்­கொண்­டுள்­ளது," என்­றும் விவ­ரித்­தார்.

தடுப்­பூசி மருந்­து­களை மற்ற நாடு­க­ளி­ட­மி­ருந்து பெறும் முயற்சி­யில் பங்­காற்­றிய மலே­சி­யா­வின் முன்­னாள் வெளி­யு­றவு அமைச்­சர் ஹிஷா­மு­தின் ஹுசே­னுக்கு திரு ஹஸ்னி நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

திரு ஹிஷா­மு­தின், தற்­போ­தைய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­பின் அமைச்­ச­ர­வை­யில் தற்­காப்பு அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி போடும் தேசிய திட்­டத்­தில், கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து இது­வரை 4.7 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்­து­களை ஜோகூர் பெற்­றி­ருப்­ப­தா­க­வும் அவற்­றில் 2.4 மில்­லி­யன் தடவை போடக்­கூ­டிய ஃபை­சர், 1.8 மில்­லி­யன் தடவை போடக்­கூ­டிய சினி­வேக், 410,750 தடவை போடக்­கூடிய ஆஸ்ட்­ரா­ஸெ­னக்கா தடுப்­பூசி மருந்து­கள் என்­றும் திரு ஹஸ்னி பட்­டி­ய­லிட்­டார்.

"நோய்த்­தொற்­றி­லி­ருந்து விடுபட தடுப்­பூசி போடு­வது எங்­க­ளது முக்­கிய உத்­தி­க­ளுள் ஒன்று. அந்த அடிப்­ப­டை­யில் ஜோகூர் மாநில அர­சாங்­கம் 18 வய­துக்கு மேற்­பட்ட மக்­களில் 100 விழுக்­காட்­டி­னர் இம்­மா­தம் 16ஆம் தேதிக்­குள் ஒரு முறை­யா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தை­யும், அடுத்த மாதம் மூன்­றாம் வாரத்­துக்­குள் அதே விழுக்­காட்­டி­னர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தை­யும் உறுதிப்படுத்துவதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளது," என்­றும் திரு ஹஸ்னி கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நில­வரப்­படி, ஜோகூ­ரில் பெரி­ய­வர்­களில் 53.5 விழுக்­காட்­டி­னர் முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்டுக்கொண்டு உள்ளனர்.