'வாட்ஸ்அப்', 'டெலிகிராம்' போன்ற செயலிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பு 'எம்எம்எஸ்' எனப்படும் மேம்பட்ட குறுந்தகவல்கள் வாயிலாகத்தான் படங்களையும் காணொளிகளையும் பிறரின் கைபேசிகளுக்கு அனுப்பமுடியும். அந்தச் சேவை வரும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு பயன்பாட்டில் இருக்காது.
நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 'எம்எம்எஸ்' சேவையை வழங்கமாட்டா.
இந்தச் சேவை இல்லாமல் போகும்போது குறுந்தகவல்களின் மூலம் படங்கள், இசைப் பதிவுகள் உள்ளிட்டவற்றைப் பிறருக்கு அனுப்பமுடியாமல் இருக்கும்.
தற்போது, குறுந்தகவலில் இவற்றை அனுப்பினால் அந்தக் குறுந்தகவல் 'எம்எம்எஸ்' தகவலாக மாறிக்கொள்ளும்.
இனி சில பழைய கைபேசிகளிலிருந்து உணர்வுக் குறிப்புகளைக் கொண்ட குறுந்தகவல்களை எளிதில் அனுப்பமுடியாமல் போகலாம்.
இந்தச் சிக்கலை எதிர்நோக்குவோர் உணர்வுக் குறிப்புகளைத் தாங்களே பதிவிடவேண்டியிருக்கும். குறுந்தகவல்கள் 'எம்எம்எஸ்' தகவல்களாக மாறும் சாத்தியம் அறவே இல்லாமல் இருக்கும்.
சிங்கப்பூரில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயனீட்டாளர்கள் பொதுவாக ஒரு மாதத்திற்கு அதிபட்சமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளூரில் இருப்பவர்களுக்குக் குறுந்தகவல்களை இலவசமாக அனுப்பலாம்.
அந்த எண்ணிக்கையைத் தாண்டும்போது ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் ஐந்து காசு கட்டணம் செலுத்தவேண்டும்.
'எம்எம்எஸ்' ஒவ்வொன்றுக்கும் 30லிருந்து 80 காசு வரை ஆகும்.
'எம்எம்எஸ்' சேவைக்கான தேவை குறைந்து வருவதால் அதை நிறுத்த முடிவுசெய்ததாக சிங்கப்பூரின் முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களான சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 ஆகியவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தன.
கடந்த மூவாண்டுகளில் மட்டுமே இதன் பயன்பாடு 40 விழுக்காடு குறைந்திருப்பதாக எம்1 கூறியது. 'எம்எம்எஸ்' சேவையை அதிகமானோர் பயன்படுத்தாததால் இதை நிறுத்துவது பயனீட்டாளர்களிடையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தாது எனத் தான் நம்புவதாக ஸ்டார்ஹப் சொன்னது.
எனினும், குறுந்தகவல் சேவை தொடர்ந்து இருக்கும் என்று மூன்று நிறுவனங்களும் பயனீட்டாளர்களுக்கு உறுதியளித்தன.
இதனை அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளிலும் கட்டமைப்பு களிலும் தொடர்ந்து பயன்படுத்தமுடியும் என்பதை சிங்டெல் சுட்டியது. மின் வர்த்தகம், விளம்பரக் குறிப்புகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை அனுப்பக் குறுந்தகவல்கள் இன்னமும் அதிகமாக உபயோகிக்கப்படுவதை அந்நிறுவனம் குறிப்பிட்டது.
2017ஆம் ஆண்டில் 2ஜி கட்டமைப்பின் செயல்பாடு சிங்கப்பூரில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கைபேசிச் சேவைகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று 'எம்எம்எஸ்'.
'எம்எம்எஸ்' சேவைக்குப் பதிலாக 'வாட்ஸ்அப்', 'டெலிகிராம்', 'வீச்சேட்' போன்ற செயலிகளைப் பயன்படுத்துமாறு சிங்டெல், எம்1 இரண்டும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டு வருகின்றன.
இத்தகைய செயலிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் வாயிலாக படங்களையும் காணொளிகளையும் பயனீட்டாளர்கள் சுமுகமாக அனுப்பலாம் என்று எம்1 சொன்னது.

