தெலுக் பிளாங்கா கிரசென்ட்டில் உள்ள வீவக கட்டடம் ஒன்றின் பொதுத் தாழ்வாரத்தில் நேற்று மாலை தீப்பற்றியது. அதனையடுத்து அங்கிருந்து நூற்றுக்கு மேலானோர் வெளியேற்றப்பட்டனர்.
கட்டடத்தின் ஒன்பதாவது மாடியின் பொதுத் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருள்கள் தீக்கிரையாயின என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தெலுக் பிளாங்கா கிரசென்ட்டில் உள்ள புளோக் 3ல் தீச்சம்பவம் குறித்து நேற்று இரவு 8 மணிக்கு அழைப்பு வந்ததாகக் கூறியது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை.
அதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீர் பீய்ச்சி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன், 9வது மாடியில் இருந்து 12வது மாடி வரையில் உள்ள குடியிருப்பாளர்களைப் பத்திரமாக மீட்டனர்.
இந்தச் சம்பவத்தில் எட்டுப் பேர் காயமடைந்தனர். அவர்களில் நால்வர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நால்வர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

