புதிய பாதுகாவலர்களைப் பணியில் அமர்த்துவதில் பாகுபாடு காட்டிய காரணத்திற்காக 'ஹில் வியு' கொண்டோமினியத்தின் நிர்வாக முகவர் சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கத்தின் கவனத்துக்கு வந்துள்ளார்.
பாதுகாவலர்களுக்கு கட்டாயம் சீன மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் 21 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று 'சாவில்ஸ் பிராப்பர்ட்டி மேனேஜ்மண்ட்' நிபந்தனைகளைத் தனது ஏலக்குத்தகையில் விதித்திருந்தது. நிபந்தனைகளைச் சந்திக்கத் தவறும் பாதுகாவலர்களை வேலைக்கு அனுப்பினால் ஒவ்வொரு முறையும் நிறுவனத்துக்கு $100 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் சில நிபந்தனைகளைப் பற்றி சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கம் கவலை கொண்டிருந்தாலும் மேற்கூறப்பட்டவை பாகுபாடு காட்டாத பாதுகாவலர் நிறுவனங்களைப் பாதிப்பதாக தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து 'டஃபெப்' எனப்படும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்பு கூட்டணி அமைப்பையும் மனிதவள அமைச்சையும் அச்சங்கம் அணுக விரும்புவதாக கூறியது. சென்ற மாதம் நடந்த தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் திரு லீ சியன் லூங் வேலையிடத்தில் பாகுபாடு காட்டுவது பொறுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தார்.

