கட்டுமான நிறுவனங்களுக்கு மின்னிலக்கத் திறன் விருதுகள்

2 mins read
c7fe2cb1-84f6-4289-b0c9-16f7de26ef36
பிளாட்டினம் விருது பெற்ற 'பாய லேபார் குவார்ட்டர்' கட்டடத் திட்டம். படம்: லேண்ட்லீஸ் -

கட்டட கட்டுமான ஆணையத்தின் (பிசிஏ) ஒருங்கிணைந்த மின்னிலக்கத் திறன் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கும் இரண்டு கட்டுமானத் திட்டங்களுக்கும் அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தித்திறனையும் மீண்டெழும் திறனையும் அதிகரிக்கும் வண்ணம் கட்டுமானத் திட்டங்களின் பல்வேறு நிலைகளில் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களுக்கும் திட்டங்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

பிளாட்டினம், கோல்டு பிளஸ் மற்றும் கோல்டு என்னும் மூன்று வகை விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஓங் அண்ட் ஓங், வோ ஹப் ஆகிய நிறுவனங்களும் பாய லேபார் குவார்ட்டர், காலாங் பலதுறை மருந்தகம் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு நிலையம் ஆகிய திட்டங்களும் விருதுகளைத் தட்டிச் சென்றன.

பிளாட்டினம் விருது பெற்ற ஓங் அண்ட் ஓங் கட்டுமான நிறுவனம் தனது ஊழியர்கள் தொலைதூரத்தில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளது.

மேலும், பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு இடையில் மின்னிலக்கத்தைக் கடைப்பிடிக்கவும் ஊழியர்களுக்கான உள்ளார்ந்த பயிற்சித் திட்டங்களை நடத்தவும் மின்னிலக்கத் தொழில்நுட்பத் துறை ஒன்றை இந்நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன், கட்டுமான மாதிரி வடிவங்களையும் தேவைக்கேற்ற வகையில் மாற்றக்கூடிய திறன்களையும் வளர்க்க உதவும் சொந்த மென்பொருள் உருவாக்கக் குழுவையும் இந்நிறுவனம் அமைத்து உள்ளது.

இதுபோன்ற வசதிகள் மூலம் அதிகமான தானியக்க முறை சாத்தியமாவதாக ஓங் அண்ட் ஓங் நிறுவனத்தின் கட்டடக் கலைப் பிரிவின் தலைமை நிர்வாகி அஷ்வின்குமார் காந்திலால் கூறினார்.

நிறுவனத்தின் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புத்திறன், புதிய தொழில்நுட்ப அறிமுக காரணமாக தொடர்பற்ற முறையில் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்