பயிற்சிக்கும் திறன் மேம்பாட்டுக்கும் செல்ல விரும்பும் உடற்குறை உள்ளோருக்காக புதிய $4 மில்லியன் நிதி ஒன்றை தெமாசெக் அறநிறுவனமும் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களும் இணைந்து ஏற்படுத்தி உள்ளன. அந்த நிதியின் தொடக்க நிகழ்வு நேற்று நடைபெற்றது.
உடற்குறையுள்ள ஒவ்வொரு பெரியவரும் தங்களது படிப்பு தொடர்பான கட்டணங்களுக்கும் கற்றல் ஆதரவு சாதனங்களை வாங்கவும் $1,000 வரை நிதி உதவி பெறுவர்.
இதன் மூலம் சுமார் 4,000 உடற்குறை உள்ளோர் பயன்பெறுவர்.
'த தெமாசெக் டிரஸ்ட்-சிடிசி லைஃப்லாங் லேனிங் எனேபிளிங் ஃபண்ட்' எனப்படும் இந்த நிதியை எஸ்ஜி எனேபிள் அமைப்பு நிர்வகிக்கும்.
உடற்குறை உள்ளோரின் வாழ்நாள் கற்றலுக்கு உதவும் நோக்கம் கொண்டது இந்த நிதி. 18 வயது அளவில் சிறப்புக் கல்விக்கான பள்ளிகளில் சான்றிதழ் பெற்ற பின்னர் கற்கும் வாய்ப்புகள் பற்றி பொதுவாகக் கவலைப்படும் சிலருக்கும் இந்நிதி ஆதரவுக் கரம் நீட்டும்.
மெய்நிகர் வாயிலாக நடைபெற்ற தொடக்க நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, உடற்குறை உள்ள பெரியவர்
களுக்கு தொழிற்கல்வியில் தொடர் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமும் சுய வாழ்க்கைக்கான திறன்களும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.