கட்டண நிறுவனமான வயர்கார்ட் சம்பந்தப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் நபர் மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆவணத்தில் பொய்யான தகவல்களைச் சேர்க்குமாறு பிறரைத் தூண்டியதன் தொடர்பில் 46 வயது ஜேம்ஸ் ஹென்ரி ஓ' சலிவன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது மொத்தம் ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார். காணொளி வாயிலாக நேற்று மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரது வழக்கின் தொடர்பில் விசாரணை இன்னும் நடந்துவருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவரை மறுபடியும் விசாரணைக் காவலில் வைக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பிணையில் விடுவிக்கப்பட ஓ' சலிவன் செலுத்தவேண்டிய தொகை 150,000 வெள்ளி.
ஐந்து குற்றச்சாட்டுகளிலும் உள்ளூர் கணக்கியல் நிறுவனமான சிட்டாடெல் கார்ப்பரேட் சர்விசஸுக்கு முன்பு இயக்குநராக இருந்தார்.
ஷண்முகரத்தினம் எல்லா குற்றச்சாட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பல ஆவணங்களில் பொய்யான தகவல்களைச் சேர்க்குமாறு அவரை ஓ' சலிவன் தூண்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மொத்தம் சுமார் 1.2 பில்லியன் யூரோ தொடர்பில் 14 குற்றச்சாட்டுகளை 55 வயது சிங்கப்பூரரான ஷண்முகரத்தினம் எதிர்நோக்குகிறார். சிங்கப்பூர் நீதிமன்றங்களில் ஆவணத்தில் பொய்யான தகவல்களைச் சேர்க்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். பொய்யான தகவல்களைச் சேர்க்குமாறு பிறரைத் தூண்டுவதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் இத்தகைய தண்டனை விதிக்கப்படலாம்.

