தோபாயோ ஈஸ்ட் லோரோங் ஏழில் உள்ள ஒட்டுமொத்த இரவுநேரக் காய்கறிச் சந்தையில் சிலருக்குக் கிருமி தொற்றியது தெரியவந்ததைத் தொடர்ந்து அச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இயங்கிவரும் அச்சந்தை, வழக்கமாக திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
அந்தச் சந்தை தனியாரால் நடத்தப்படும் காய்கறி விநியோக இடம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சந்தையை நடத்துவோர் தாமாகவே முன்வந்து அதை மூடியதாகவும் அமைப்பு கூறியது.
அந்த இடத்தில் மிகக் குறைவானவர்களே சென்று காய்கறிகள் வாங்குவதால் உணவு விநியோகத்தில் சொற்ப பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று அமைப்பு குறிப்பிட்டது.
சந்தை மூடப்பட்ட விவரம் பற்றி சீனச் செய்தித்தாளான லியான்ஹ சாவ்பாவ் நேற்று செய்தி வெளியிட்டது.
திறந்தவெளியில் செயல்படும் சந்தையில் காய்கறிகள் திறந்த பெட்டிகளில் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் சேஃப்என்ட்ரி முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை அங்கு கடைப்பிடிக்கப்படவில்லை.
அந்த ஒட்டுமொத்தச் சந்தையிலிருந்துதான் காய்கறிகளை வாங்கியதாக தோ பாயோ லோரோங் ஏழு ஈரச்சந்தையில் உள்ள காய் கறிக் கடைக்காரர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். சந்தை மூடப்பட்டதிலிருந்து பாசிர் பாஞ்சாங் ஒட்டுமொத்தச் சந்தையிலிருந்து இணையம் வழியாகக் காய்கறிகளை வாங்கு வதாக அவர் சொன்னார்.
இரவுநேரச் சந்தையுடன் ஒப்பிடும்போது தற்போது காய்கறி விலை சற்று அதிகமாக உள்ளதாக பாசிர் பாஞ்சாங் சந்தையிலிருந்து வாங்கும் வேறொரு கடைக்காரர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

