பிரதமர் லீயின் தேசிய தினப் பேரணி உரையை ஒட்டிய கலந்துரையாடல்
வேலையிடத்தில் நியாயமான வழிகாட்டுதல்கள் விரைவில் சட்டமாக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்ததை அடுத்து, பலரும் ஆர்வம் காட்டும் ஒரு விவகாரமாக வேலையிடப் பாகுபாடு உருவெடுத்துள்ளது.
இந்த விவகாரத்துடன் வேறு பல அம்சங்கள் பற்றியும் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரை தொடர்பான கலந்துரையாடலின்போது பேசப்பட்டது. நிகழ்வில் அடித்தள அமைப்புகளின் தொண்டூழியர்களும் மலாய், முஸ்லிம் சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 200 பேர் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல், மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழுக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கலந்துரையாடலை வழிநடத்தியோரில் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மானும் இடம்பெற்றிருந்தார்.
வேலையிடத்தில் பாகுபாடு காட்டப்படுதல், அந்த விவகாரத்தை 'டபெப்' எனப்படும் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி எவ்வாறு கையாளும் போன்ற கேள்விகளை கலந்துரையாடலின்போது எழுப்பினர் சிலர்.
'ஸூம்' வழி கலந்துரையாடலில் இணைந்த ஒருவர், வேலைக்கான விளம்பரங்களில் மொழி தொடர்பான தகுதிநிலை குறித்துத் தெளிவான வழிகாட்டுதல்கள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகம் சந்திக்கக்கூடிய அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடலில் பேசப்பட்டது. தம்மிடம் பெருத்த அனுபவம் இருந்தும் தம்மைவிட இளையவர்களுக்குக் கூடுதல் ஊதியம் கிடைப்பதாகக் கூறித் தமது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார் மற்றொருவர்.
இத்தகைய வேலைவாய்ப்பு தொடர்பான விவகாரங்களை 'டஃபெப்' எவ்வாறு கையாளும் என்பது குறித்து பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி எம்.பி. சக்தியாண்டி சுப்பாட் கூடுதல் விவரங்களை அளித்தார்.
நடைமுறைப்படுத்தப்பட உள்ள இன நல்லிணக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளுதலுக்கான சட்டம் தொடர்பான கேள்விகளும் எழுப்பப்பட்டன. வெவ்வேறு இனக் குழுக்களிடையே நிதானத்தையும் சகிப்புத்தன்மையையும் ஊக்குவிக்க இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் லீ முன்னர் கூறியிருந்தார்.
கடந்த சில மாதங்களில் இனரீதியாக நடந்துள்ள சம்பவங்கள் குறித்தும் கலந்துரையாடலின்போது பேசப்பட்டது.
வாடகை வீடுகளில் இருக்கும் இளம் மலாய் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் கேட்டனர்.
தாம் முன்னர் குறிப்பிட்டது போல் 'DIAN@M3' திட்டம் மூலம் இந்தக் குடும்பங்களுக்கு உதவி கிடைக்கும் என்றார் டாக்டர் மாலிக்கி. சொந்த வீடுகளை வாங்குவதற்கான ஆதரவை, வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டம் வழங்கும் என்று வலியுறுத்தினார் அவர்.
"நாம் ஒரு சமூகமாக சந்திக்கும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வு இங்குள்ள பங்கேற்பாளர்களிடையே இருப்பதை உணரும்போது எங்களை அது நெகிழ வைக்கிறது," என்றார் டாக்டர் மாலிக்கி.
அத்துடன் மலாய், முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதிலும் ஆதரவு தேவைப்படும் சமூகத்தினரை அடைவதற்கு அரசாங்கத்துடன் செயல்படுவதிலும் பங்கேற்பாளர்கள் ஆர்வம் காட்டுவதையும் அவர் பாராட்டினார்.
இதனால் மலாய், முஸ்லிம் சமூகத்தினர் ஒன்றாக முன்னேறி மேம்பட்ட நிலையை அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

