கி. ஜனார்த்தனன்
வெட்டிவேரால் உருவாக்கப்பட்ட 16 அடி உயர, 16 அடி அகல விநாயகரின் திருவுருவம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை உருவாக்கப்பட்ட ஆக உயரமான விநாயகர் திருவுருவமாக இது கருதப்படுகிறது.
தற்போது நிலவிவரும் கொவிட்-19 கிருமிப் பரவல் ஓயவேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்து பாரம்பரிய மூலிகையான வெட்டிவேர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயம் கூறியது.
"பதினாறு வகையான வளங்களைக் குறிக்கும் வகையில் பதினாறு அடி உருவம் உருவாக்கப்பட்டது," என்று உருவத்தை வடிவமைத்து அதன் உருவாக்கத்தை வழிநடத்திய ஆலயத்தின் அலங்கார அர்ச்சகர் வாகேசன் குருக்கள் தெரிவித்தார். இந்தத் திருவுருவத்தைச் செய்ய இந்தியாவிலிருந்து 150 கிலோகிராம் எடையுள்ள வெட்டிவேர் தருவிக்கப்பட்டதாக ஆலயத்தின் செயலாளர் க. கலையரசன் தெரிவித்தார்.
விநாயகர் திருவுருவம் இம்மாதம் 1ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு திருவுருவத்தைக் கடந்தாண்டு கரும்பைப் பயன்படுத்தி ஆலயம் செய்திருந்தது.
"இந்துக்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள பௌத்த ஆலயத்துக்குச் செல்லும் பிற இன, சமயத்தவரும் இந்த விநாயகரைக் காண இங்கு வருகின்றனர்," என்றார் திரு கலையரசன்.
இன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட பக்தர்கள் நேரில் ஆலயத்திற்கு வரலாம் அல்லது இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஃபேஸ்புக் பக்கத்தின் நேரலை மூலம் இணையலாம் என்று திரு கலை குறிப்பிட்டார்.
பூக்கடை வியாபாரம் மந்தம்
இதற்கிடையே, லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள பூக்கடைகளும் மளிகைக் கடைகளும், விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு பொருட்களை அதிகம் தருவித்து விற்கின்றன. வாடிக்கையாளர்கள் வருகின்றனர் என்றாலும் வியாபாரம் இவ்வாண்டு திருப்திகரமாக இல்லை என்பது கடைக்காரர்களின் பொதுவான கருத்து.
எதிர்பார்த்த அளவுக்கு வர்த்தகம் நடைபெறவில்லை என்ற கார்த்திகா டிரேடிங் உரிமையாளர் எ. ஜெயக்குமார், பொருட்களைத் தருவிப்பதற்கான செலவு மிக அதிகம் என்றார்.
"தருவிக்கும் பொருட்களின் விலை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. முன்பைவிட வாடிக்கையாளர் கூட்டமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது," என்றார்.
வர்த்தக மந்தத்திற்கு மாறிவரும் வாடிக்கையாளர்களின் தேவையும் ஒரு காரணம் என்று தனாஸ் பூக்கடையின் விற்பனை நாராயணசாமி, 70, தெரிவித்தார்.
"சிங்கப்பூரர்களிடையே இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் பாரம்பரியப் போக்கு கடந்த பத்து ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. அத்துடன், விற்கப்படும் பொருட்கள் தங்களைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பலர் பொருட்களை எளிதில் வாங்குவதில்லை," என்று தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் தரப்பில் மிதமான திருப்தி தென்பட்டது. கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு விற்கப்படும் பூ வகைகள் அதிகரித்திருப்பதாக 57 வயது திருவாட்டி லலிதா கூறினார், பூக்களின் விலை 50 காசு முதல் ஒரு வெள்ளி வரை அதிகரித்திருப்பதாக 66 வயது திருவாட்டி பானுமதி கூறினர். பூவின் விலை அதிகரித்திருந்தாலும் நினைத்த பொருட்களை வாங்க முடிந்ததை எண்ணி மகிழ்வதாகத் கூறினார் 42 வயது திருவாட்டி காஞ்சனா.

