நிதி மீள்திறனும் திறனாற்றலும் அவசியமானவை என்றும் குறிப்பாக உலகம் தற்போது எதிர்கொண்டுவரும் நெருக்கடியின்போது அவை மிகவும் தேவை என்றும் மனிதவள துணை அமைச்சர் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரிடம் இருப்புநிதி உள்ளதால்தான் பெருந்தொற்று நேரத்தில் ஏற்பட்டுள்ள உடனடி தேவைகளைச் சமாளிக்கவும் எதிர்காலத்தில் இன்னும் வலுவாக மீள்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் முடிந்துள்ளது என்று திருவாட்டி கான் குறிப்பிட்டார்.
முந்தைய தலைமுறையினர் பல்லாண்டுகளுக்கு முன் நிதி குறித்து எடுத்த முடிவுகளும் சிறிது சிறிதாக சேர்க்கப்பட்ட நிதி இருப்பும் தான் சிங்கப்பூருக்கு இன்று உதவின என்று அவர் கூறினார்.
"நிதி மீள்திறன் உடனடியாக உருவாகிவிடாது. அரசாங்கம் மட்டுமல்லாது சமூக அளவிலும் தனி நபரும் நிதி மீள்திறன் பெறவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான மீள்திறனைப் பெற்றதாகக் கருதலாம்," என்றார் அவர்.
சிட்டி அறநிறுவனமும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் இணையம் வழியாக நடத்திய நிதித் திறனாற்றல் கருத்தரங்கில் திருவாட்டி கான் நேற்று பேசினார்.
மனிசென்ஸ் நிதித் திறனாற்றல் திட்டம் இவ்வாண்டு ஏற்பாடு செய்த கணக்கெடுப்பில் கலந்துகொண்டவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் ஓய்வுகாலத் திட்டங்களில் ஓரளவு நம்பிக்கை கொண்டிருப்பதாக கருத்துரைத்தனர்.
சிட்டி அறநிறுவனமும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டு தொடங்கிய நிதித் திறனாற்றல் திட்டம் உள்ளிட்ட வளங்களும் தகவல்களும் ஓய்வுகாலத்துக்கு முன்கூட்டியே திட்டமிட மக்களுக்கு உதவும் என்று அவர் சொன்னார்.
அந்தத் திட்டத்தின்கீழ் இளையர்களுக்கு நிதி பற்றிய கூடுதல் மின்னிலக்கத் தகவல்களை வழங்க கூடுதல் திட்டங்கள் தொடங்கப்படும் என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல் கலைக்கழகத்தின் தலைவர் முனைவர் லில்லி கோங் கூறினார்.

