செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3c82e13c-13a0-452d-ba0f-257cd49a6065
-

மாணாக்கரின் பெற்றோரை சந்திக்கும்

தேசிய பல்கலைக்கழகத் தலைவர்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் டான் எங் சாய், யேல்-என்யுஎஸ் கல்லூரியை மூடும் முடிவு பற்றி பேச மாணவர்களின் பெற்றோருடன் இணையம்வழி கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.

யேல்-என்யுஎஸ் கல்லூரி 2025இல் மூடப்படும் எனும் அறிவிப்பைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்களின் பெற்றோர் தங்களுடன் ஆலோசனை நடத்தாமல் அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். இதற்கு முன்னர் அவர்கள் நடத்திய சந்திப்பில் தேசிய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கலந்துகொள்ளவில்லை.

பெரிய கூட்டத்தை நடத்துவதற்கு பதிலாக இம்மாதம் பெற்றோரை சிறிய குழுக்களாகச் சந்திக்கப் போவதாக டாக்டர் டான் கூறியிருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த பெற்றோர் தரப்பு இன்றிரவு ஏழு மணிக்கு கூட்டம் நடத்த முடிவு செய்தது. தற்போது, அடுத்த வாரம் பெற்றோருடன் பெரிய கூட்டத்தை நடத்த டாக்டர் டான் இணங்கியுள்ளார். ஆனால் அதற்கான தேதி இன்னும் குறிக்கப்படவில்லை.

கதைக்களத்தில் பாரதியார் கதைகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களத்தில், இம்மாதம் நடைபெறும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுநாள் நூற்றாண்டை ஒட்டி அவரது சிறுகதைகளில் கவனம் செலுத்தப்படும்.

நாளை ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு, கதைக்களம் நிகழ்ச்சி இணையம் வழியாக நடைபெறவுள்ளது. இதில் பாரதியாரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைப் பற்றிய தங்கள் எண்ணங்களை முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், கவிஞர் இரா.சத்திக்கண்ணன், மாணவர்கள் ஆகியோர் பகிர்ந்துகொள்வார்கள். முனைவர் இரத்தின வேங்கடேசன் இந்த அங்கத்தை வழிநடத்துவார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும்.

சூம் இணைப்பு:

http://singaporetamilwriters.com/kathaikalamzoom/

சந்திப்பு எண்: 945 6283 9520

கடவு எண்: 388208

மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

மக்கள் செயல் கட்சி, கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, வீட்டுக்கு வீடு மேற்கொள்ளும் வருகையைத் தற்காலிகமாக நிறுத்தும்படி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நேரடி சந்திப்புகளையும் வரம்புக்கு உட்பட்ட அளவுக்கு வைத்துக்கொள்ளும்படியும் அது உறுப்பினர்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. நேரடியாக மக்களைச் சந்திப்பதைப் பல உறுப்பினர்கள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். மாறாக, மின்னஞ்சல், தொலைபேசி, காணொளி மூலம் தொடர்புகொள்ளும்படி குடியிருப்பாளர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமூக அளவிலான கிருமித்தொற்று சென்ற வாரம் இரட்டிப்பானதைத் தொடர்ந்து, அவசியம் இல்லாத சமூக நடவடிக்கைகளை அடுத்த இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளும்படி அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டது.

$8 பில்லியனை ஈட்டிய

மின்வர்த்தக நிறுவனப் பங்குகள்

சிங்கப்பூரைச் சேர்ந்த சீ (Sea) எனும் இணைய விளையாட்டு, மின்வர்த்தக நிறுவனம் அதன் அமெரிக்கப் பங்குகளையும் மாற்றத்தக்கக் கடன் பத்திரங்களையும் விற்று ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் (S$8 பில்லியன்) தொகையை ஈட்டியுள்ளது. ஒரு தென்கிழக்காசிய நிறுவனம் பங்குகளை விற்று இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

சீ நிறுவனம் 11 மில்லியன் பங்குகளைத் தலா 318 டாலருக்கு விற்று மூன்றரை பில்லியன் டாலரை ஈட்டியது.

இது, 1996ஆம் ஆண்டில் சிங்டெல் நிறுவனத்தின் பங்குகள் 1.8 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பின்னர் தென்கிழக்காசிய நிறுவனம் நடத்தியுள்ள மிகப் பெரிய பங்குவிற்பனை என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அத்துடன், சீ நிறுவனத்தின் மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் 2.5 பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டன.